Published : 30 Jul 2014 12:00 AM
Last Updated : 30 Jul 2014 12:00 AM
நாட்டின் முதல் பெண் மருத்து வரான முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டுமென்றும், அவர் பிறந்த ஊரான புதுக்கோட்டையில் மணிமண்டபம் அமைக்க வேண்டு மென்றும் புதுக்கோட்டை மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
டாக்டர் முத்துலட்சுமி. புதுக் கோட்டையில் 1886 ஜூலை 30-ல் பிறந்தவர். 1907-ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் படிப்பை முடித்த முத்துலட்சுமி, 1912-ல் நாட்டின் முதல் பெண் மருத்துவரானார். சென்னை சட்டப்பேரவையின் முதல் பெண் உறுப்பினராகவும் இருந்துள்ளார். தேவதாசி முறை ஒழிப்பு, பால்ய விவாக தடைச் சட்டம், பாலியல் தொழில் தடைச் சட்டம், போன்ற சட்டங்கள் நிறைவேற பாடுபட்டவர்.
ஆதரவற்ற குழந்தைகள், பெண்களுக்காக சென்னையில் 1930-ல் அவ்வை இல்லத்தை நிறுவிய முத்துலட்சுமி, புற்று நோயிலிருந்து மக்களைக் காக்கும் வகையில், சென்னை அடையாறில் புற்று நோய் மருத்துவமனையை 1954-ல் தொடங்கினார். தமிழக அரசு அவரது பெயரில் கர்ப்பிணிகளுக்கான உதவித் தொகை மற்றும் கலப்புத் திருமண உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் புதுக்கோட்டை மதியழகன் கூறியதாவது: “புதுக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத் தில் முத்துலட்சுமிக்கு சிலை அமைக்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால், இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக அரசு முத்துலட்சுமி ரெட்டிக்கு சிலை, மணிமண்டபம் அமைக்கவும், அவரது பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாடவும் முன்வர வேண்டும். இதுவே புதுக்கோட்டை மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT