Last Updated : 28 Feb, 2023 11:18 PM

 

Published : 28 Feb 2023 11:18 PM
Last Updated : 28 Feb 2023 11:18 PM

திமுக கூட்டத்தில் வெடித்த ‘சர்ச்சை ஆடியோ’ பேச்சு - குரல்கொடுத்த கவுன்சிலரிடம் வாக்குவாதம் செய்த சக நிர்வாகிகள்

சேலம் மாநகர, மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடந்த பொது உறுப்பினர்கள் கூட்டம்

சேலம்: சேலத்தில் நேற்று நடந்த திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் ஜாதி ரீதியாக இழிவுபடுத்தி பேசிய மாநகர அவைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குரல் கொடுத்த கவுன்சிலரை கட்சி நிர்வாகிகள் வளையமிட்டு காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளில் கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து கொண்டாடிட வேண்டி, சேலம் மாநகர, மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் பொது உறுப்பினர்கள் கூட்டம் கலைஞர் மாளிகையில் நடந்தது. இக்கூட்டத்தில் சேலம் மாநகராட்சி 43வது வார்டு கவுன்சிலர் குணசேகரன் கலந்துகொண்டு பேசினார்.

அவர் பேசும் போது, ‘திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளில் மக்கள் நலன் பெறும் விதமாக உதவிகளை செய்திட, சிறப்பான முறையில் கொண்டாடிட வேண்டும்,’ என்றார். தொடர்ந்து ‘சேலம் திமுக மாநகர அவைத்தலைவர் முருகன், குறிப்பிட்ட ஜாதியை இழிவுப்படுத்தி பேசிய ஆடியோ வெளியாகியும், அவர்மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்காதது ஏன்’ என கேள்வி எழுப்பினார்.

திமுக தலைவர் பிறந்த நாளில் தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக கவுன்சிலர் குணசேகரன் பேசுவதாக குற்றம்சாட்டி, கட்சி நிர்வாகிகள் காரசாரமாக கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மாநகர மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், திமுக கவுன்சிலர் குணசேகரனை அமைதிப்படுத்தியதை அடுத்து, கூட்டம் தொடர்ந்து நடந்தது.

இதுகுறித்து திமுக கவுன்சிலர் குணசேகரனிடம் கேட்ட போது, ‘‘ஜாதி, இன, மதத்துக்கு அப்பாற்பட்ட திமுக-வில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒன்றிய செயலாளர் மாணிக்கம், பழங்குடியின மக்களை தரம் தாழ்த்தி பேசியதால், கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதேபோல, சேலம் திமுக மாநகர அவைத் தலைவர் முருகன், ஒரு ஜாதியை இழிவுபடுத்தி, தரம் தாழ்த்தி பேசும் ஆடியோ வெளியாகியும், மாநகர மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமைக்கு தகவலை கொண்டு சென்று நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பியதால், கட்சி நிர்வாகிகள் என்னை வளையமிட்டு கடும் வார்த்தைகளால் பேசினர்.

ஜாதி துவேசத்துடன் பேசிய ‘ஆடியோ’ எதிர்கட்சியினர் வைரலாக்கினால், திமுக-வுக்கு களங்கம் ஏற்பட்டு, மக்கள் மத்தியில் பலமிழக்கும் என்பதற்காகவே, பொது உறுப்பினர் கூட்டத்தில் பேச வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டேன்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x