Last Updated : 28 Feb, 2023 10:57 PM

1  

Published : 28 Feb 2023 10:57 PM
Last Updated : 28 Feb 2023 10:57 PM

எல்லா வரிகளையும் ஜிஎஸ்டியாக பெற்றுக்கொண்டு பகிர்ந்து அளிப்பது சிறந்த முறை கிடையாது: பழனிவேல் தியாகராஜன்

கோவை: எல்லா வரிகளையும் ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு பெற்றுக்கொண்டு, அதன்பிறகு பகிர்ந்து அளிப்பது என்பது சிறந்த முறை கிடையாது என நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

கோவை அவினாசி சாலையில் உள்ள ஜி.டி. நாயுடு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 'எக்ஸ்பிரிமெண்டா' எனும் அறிவியல் மையத்தை இன்று (பிப்.28) திறந்துவைத்த பின்னர், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜிஎஸ்டி வரியை பொறுத்தவரையில், ஓராண்டுக்கு முழுவதுமாகவும், 3 மாதத்திற்கு பாதியும் நமக்கு வர வேண்டியுள்ளது. வரும் மாதத்தில் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் வந்துவிடும்.

அதன்பிறகு சுமார் ரூ.3 ஆயிரம் கோடி முதல் ரூ.4,500 கோடி வரை இழப்பீட்டு தொகையில் நிலுவை இருக்கும் என கருதுகிறேன். மாதந்தோறும் வர வேண்டிய தொகையும் காலதாமதமாகவே வருகிறது. எல்லா வரிகளையும் ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு பெற்றுக்கொண்டு, அதன்பிறகு பகிர்ந்து அளிப்பது என்பது என்னைப்பொருத்தவரை சிறந்த முறை கிடையாது. அந்தந்த மாநிலங்கள் பெறும் வரிகளை (எஸ்ஜிஎஸ்டி) அவர்களே வைத்துக்கொண்டு, மத்திய அரசுக்கு செல்லும் வரியை (சிஜிஎஸ்டி) வேண்டுமானால் பிரித்து வழங்கலாம்.

அதுதான் நியாயமான முறையாக இருக்கும். அடுத்து மதுரையில் நடக்கக்கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முதல்வரின் ஒப்புதலுடன் ஜிஎஸ்டி தொடர்பாக சில கருத்துகளை முன்வைக்க உள்ளேன். கடந்த 2003-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை தமிழகத்தின் நிதிநிலை நன்றாக இருந்தது. இந்நிலையில், 2014-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை சரிவை சந்தித்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 7 ஆண்டுகளில் ஏற்பட்ட சரிவை கிட்டத்தட்ட 3-ல் 2 பங்கு அளவுக்கு திருத்தி இருக்கிறோம்.

சமுதாயம் முன்னேற, சமமான நிலை ஏற்பட, ஏழை, எளிய மக்களுக்கு பலன் கிடைக்கும் வகையில், ஒரு பொருளையோ, சேவையையோ பணம் பெறாமல் அளிக்கவே அரசு உள்ளது. அதை தவறு என்று கூற இயலாது. ஆனால், அனைத்தையும் விலையில்லாமல் அளிப்பதை நல்லது என்று கூற இயலாது. இந்த விஷயத்தை சிந்தித்து செயல்படுத்த வேண்டும்.

தொழில் அதிபர் அதானியின் பங்குகள் சரிந்து வருகின்றன. இத்தனை ஆண்டு காலமாக பங்குச்சந்தையில் அதானி பங்குகள் குறித்த குளறுபடிகள் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) போன்றவற்றுக்கு தெரியாமல் எப்படி இருந்தது என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது. இந்த விஷயம் குறித்து நாடாளுமன்றம் உட்பட பல இடங்களில் முன்பே பலர் குறிப்பிட்டனர். அப்போதெல்லாம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை அனைவரும் சிந்திக்க வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x