Published : 28 Feb 2023 07:18 PM
Last Updated : 28 Feb 2023 07:18 PM
மதுரை: மதுரை மாவட்டம் குலமங்கலத்தில் அரசு நெல் கொள்முதல் மையத்திற்கு வரும் விவசாயிகளிடம் ஒரு மூட்டைக்கு ரூ.50 கட்டாயமாக வசூலிக்கின்றனர். இப்புகார் குறித்து தமிழக முதல்வர், அமைச்சர், ஆட்சியர் என மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
மதுரை மாவட்டம் மேற்கு ஒன்றியம் குலமங்கலம் பகுதியில் இரண்டாம் போக சாகுபடி நெல்லை கொள்முதல் செய்வதற்கு அரசு நெல் கொள்முதல் மையம் பிப்.8ம் தேதி தொடங்கப்பட்டது. தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை ஒரு மூட்டைக்கு ரூ.50 கட்டயமாக வசூலிப்பதாக விவசாயிகள் தொடர் புகார்கள் கூறிவருகின்றனர். இதுதொடர்பாக தமிழக முதல்வர், வேளாண்மைத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த தீர்வும் ஏற்படவில்லை. மேலும் புகாரளிக்கும் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து விவசாயி வெற்றிவேல்முருகன் கூறியதாவது: ''குலமங்கலம் அரசு நெல்கொள்முதல் மையம் அதிகாரிகள் கட்டுப்பாட்டில்லை. ஆளும்கட்சியினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு வரும் விவசாயிகளிடம் ஒரு மூட்டைக்கு நெல் தூற்றுவதற்கான கூலி, சிப்பம் போடுதல், சுமை கூலி என ரூ.50 கட்டாயமாக வசூலிக்கின்றனர். 40 கிலோ மூட்டைக்கு 42 கிலோ வரை பிடிக்கின்றனர். மேலும் ஒவ்வொரு விவசாயிகளிடமும் 20 கிலோவை கணக்கின்றி பிடிக்கின்றனர்.
ஊராட்சி தலைவரின் கணவர்தான் நெல் கொள்முதல் மையத்தை நடத்துகிறார். அதில் முறைகேடாக ஊராட்சிக்குரிய எலக்ட்ரிக் வாகனத்தை நெல் கொள்முதல் மையத்தில் பயன்படுத்துகின்றனர். தமிழக முதல்வர் வரை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து நேர்மையான அதிகாரிகள் மூலம் நியாயமான விசாரணை நடத்தி கட்டாயமாக வசூலை தடுக்க வேண்டும்,'' என்றார்.
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் அருள்பிரசாத் கூறியதாவது: ''அரசு சார்பில் நெல் கொள்முதல் மையம் நடத்தப்படுகிறது. விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை தரம்பிரித்து சிப்பம் போட்டு லாரியில் ஏற்றுவதற்கு ஒரு மூட்டைக்கு ரூ.10 அரசு தருகிறது. ஆனால் சுமை தூக்கும் தொழிலாளர்கள் அரசு வசம் இல்லை. இதனால் அங்குள்ள விவசாயிகளே சுமை தூக்கும் தொழிலாளர்களை ஏற்பாடு செய்துகொள்கின்றனர். அதற்கான கூலிகளை அவர்களே ஏற்றுக்கொள்கின்றனர்.
புகார்கள் குறித்து தமிழக முதல்வரிடம் அளித்த மனுவின் அடிப்படையில் சென்னையிலிருந்து விஜிலென்ஸ் குழு விசாரித்து சென்றுள்ளனர். அதேபோல், மதுரை மாவட்ட ஆட்சியர் அமைத்த குழுவினரும் விசாரித்துள்ளனர். முறைகேடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனிப்பட்ட அரசியல் காரணங்களை இதில் பயன்படுத்துவதால் உண்மையான விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்,'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT