Published : 11 Sep 2017 10:25 AM
Last Updated : 11 Sep 2017 10:25 AM
குப்பைகள் அகற்றாதது, பொது கழிவறைகள் அசுத்தமாக இருப்பது தொடர்பாக ‘ஸ்வச்சதா’ செயலியில்தெரிவிக்கப்படும் புகார்கள் மீது விரைவாக தீர்வு காணும் நகரங்கள் பட்டியலில் சென்னை மாநகரம் 23-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நகரின் தூய்மையை பாதுகாக்கும் பொருட்டு, இந்த அமைச்சகம் சார்பில் கடந்த ஆண்டு ‘ஸ்வச்சதா’ என்ற, பொதுமக்கள் புகார்கள் மீது தீர்வு காணும் 4-ம் தலைமுறை செல்போன் செயலியை வெளியிட்டது.
236வது இடம்
இந்த செயலி மூலம், குப்பை எடுக்கப்படாமல் இருத்தல், குப்பை ஊர்தி வராமல் இருத்தல், குப்பைத் தொட்டி தூய்மைப்படுத்தாமல் இருத்தல், தெரு மற்றும் சாலைகளை பெருக்காமல் இருத்தல், வீட்டு விலங்குகள் ஏதேனும் இறந்து கிடந்தால், அதை எடுக்காமல் இருத்தல், பொதுக்கழிப்பறைகள் பராமரிப்பின்றி இருத்தல் போன்றவற்றை படம் எடுத்து, புகாராக அனுப்பி வைக்கலாம்.
இந்த புகார்கள் மீது அந்தந்த நகரங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகள் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டு, அந்த மதிப்பெண், ஆண்டுதோறும் தேசிய அளவில் அறிவிக்கப்படும் தூய்மை நகரங்கள் தேர்வில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
கடந்த ஆண்டு, இந்த செயலி மூலம் வரும் புகார்கள் மீது சென்னை மாநகராட்சி கவனம் செலுத்தாமல் இருந்ததாலும், அந்த செயலி குறித்து பிரபலப்படுத்தாமல் இருந்ததாலும்தான் இந்த ஆண்டு வெளியிடப்பட்ட தூய்மை நகரங்கள் பட்டியலில் சென்னை மாநகராட்சிக்கு 236-வது இடம் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ‘ஸ்வச்சதா’ செயலி குறித்த விழிப்புணர்வை சென்னை மாநகராட்சி ஏற்படுத்தி வருகிறது. இந்த செயலியை முறையாக நடைமுறைப்படுத்தி தீர்வு காணும் நகரங்களின் வரிசைப் பட்டியலில் 29-வது இடத்திலிருந்த சென்னை, தற்போது 23-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. தமிழக அளவில் 3-ம் இடத்தில் உள்ளது. மேலும் 12 மணி நேரத்துக்குள் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதன் சதவீதம் 70 ஆகவும் உயர்ந்துள்ளது.
பதிவிறக்கம்
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘இந்த செயலியில் தெரிவிக்கப்படும் புகார்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, மாநகராட்சி ஆணையரும், துணை ஆணையரும் நேரடியாக பார்வையிடுவதால், புகார்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மாநகராட்சி சார்பில் கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகளில் ‘ஸ்வச்சதா’ செயலி குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது, அடுத்த ஆண்டுக்கான தூய்மை மதிப்பீட்டை, இந்த ஆண்டு ஏப்ரல் முதல் கணக்கிடும் வகையில், மத்திய அரசு மதிப்பீட்டு விதிகளையும் மாற்றியமைத்துள்ளது.
இக்காரணங்களால், மொத்தம் உள்ள 4 ஆயிரத்து 41 நகரங்களில், சென்னை மாநகரம் 23-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பொதுமக்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய, தங்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட் செல்போனில், கூகுள் பிளே ஸ்டோருக்குச் சென்று SWACHHATA- MoUD என தட்டச்சு செய்து பதிவிறக்கம் செய்யலாம்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT