Published : 11 Jul 2014 10:00 AM
Last Updated : 11 Jul 2014 10:00 AM
மவுலிவாக்கம் கட்டிட விபத்து தொடர்பாக ஆளுங்கட்சியினருடன் ஏற்பட்ட மோதலால், தேமுதிக, திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சியினரும் சட்டப்பேரவையில் இருந்து வியாழக்கிழமை வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டசபை வியாழக்கிழமை கூடியது. கேள்வி நேரம் முடிந்ததும் சட்டசபை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்து பேச வாய்ப்பு கேட்டார். தேமுதிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உறுப்பினர்களும் அதே பிரச்சினை குறித்து பேச வாய்ப்பளிக்க வேண்டும் என கோரினர். எல்லோரும் ஒரே நேரத்தில் பேசியதால் அவையில் கூச்சலாக இருந்தது.
அப்போது பேரவைத் தலைவர் ப.தனபால், “இப்பிரச்சினை தொடர்பாக விசாரணை மேற் கொள்ள நீதியரசர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, அதுகுறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்ப இயலாது” என்றார்.
அமைச்சர் வைத்திலிங்கம்: இப்பிரச்சினைக்கு எனது பதிலுரையில் விளக்கம் அளிக்கிறேன். தைரியம் இருந்தால் அதைக் கேட்டுவிட்டு, வெளிநடப்பு செய்யுங்கள்.
அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்: எல்லோரும் ஒரே நேரத்தில் எழுந்து பேசக் கூடாது. ஒவ்வொரு கட்சியிலும் பொறுப்பான ஒருவர் பேச வாய்ப்பு கேட்கலாம்.
அமைச்சர் வைத்திலிங்கம்: பதிலளிக்க தயாராக இருக்கிறேன். எதையாவது சொல்லிவிட்டு ஓடிவிடலாம் என நினைக்காதீர்கள்.
(அப்போது எதிர்க்கட்சியினர் மீண்டும் ஒரே நேரத்தில் பேசினர். இதற்கு ஆளும்கட்சி தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது).
பேரவைத் தலைவர்: பேரவை விதி 66-ன்படி, நீதி விசாரணையில் இருக்கும் ஒரு பொருள் பற்றி இங்கு விவாதிக்க முடியாது.
ஆனால், தொடர்ந்து எதிர்க்கட்சியினர் தங்களுக்கு பேச வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டபடி இருந்தனர். பேரவைத் தலைவர் வாய்ப்பு தராததால் திமுக, தேமுதிக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மமக, புதிய தமிழகம் கட்சிகளின் உறுப்பினர்கள் வரிசையாக வெளிநடப்பு செய்தனர்
அப்போது அமைச்சர் வைத்திலிங்கம் எழுந்து, ‘‘நான் பதில் சொல்கிறேன் என்று சொல்லியும் ஓடுகாலிகளைபோல் ஓடுகிறார்கள்’’ என்றார். பேரவை நிகழ்ச்சிகளில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கவில்லை. தேமுதிக தலைவர் விஜயகாந்த், லாபியில் இருந்த வருகைப் பதிவேட்டில் கையெழுத் திட்டபோதிலும் அவைக்குள் வரவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT