Last Updated : 02 Sep, 2017 11:51 AM

 

Published : 02 Sep 2017 11:51 AM
Last Updated : 02 Sep 2017 11:51 AM

மதுரையில் ‘ ப்ளூவேல்’ விளையாட்டில் பலியான விக்னேஷின் நண்பர்கள் 20 பேரிடம் போலீஸ் விசாரணை

மதுரையில் ‘ப்ளூவேல்’ விளையாட்டு விபரீதத்தால் பலியான கல்லூரி மாணவரின் நெருங்கிய நண்பர்கள் 20 பேரிடம் போலீஸார் நேற்று விசாரணை செய்தனர். அவர்களது செல்போன்களை ஆய்வு செய்தனர். மேலும் டெல்லி உட்பட பல்வேறு இடங்களில் தொழில்நுட்ப ரீதியான தகவல்களை சைபர் கிரைம் போலீஸார் திரட்டி வருகின்றனர்.

மதுரை அருகே விளாச்சேரி மொட்டமலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவர் விக்னேஷ்(19) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆஸ்டின்பட்டி போலீஸார் நடத்திய விசாரணையில், மாணவரின் இடது கையில் தடை செய்யப்பட்ட ‘ப்ளூவேல்’ ஆன்லைன் விளையாட்டுக்கான அடையாளம் வரையப்பட்டிருந்தது. ஒரு நோட்டில் அந்த விளையாட்டுக்கான வாசகமும் இடம் பெற்றிருந்தது தெரிய வந்தது.

எனவே இந்த விபரீதமான விளையாட்டால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரிக்கின்றனர். இதற்காக அவரது செல்போன், சிம்கார்டு, போன் வாங்கிய ரசீது, கல்லூரிக்கு கொண்டு சென்ற பை, நோட்டுப் புத்தகங்கள், தூக்குப்போட பயன்படுத்திய அவரது தாயாரின் சேலை ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர். அதே சமயம் சைபர் கிரைம் போலீஸார் விக்னேஷின் செல்போன், மொபைல் எண்கள் மூலம் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

இந் நிலையில், தனது மகனுடன் பழகிய 75-க்கும் மேற்பட்ட நண்பர்கள் ‘ப்ளூவேல்’ விளையாட்டில் சிக்கி இருக்க வாய்ப்புள்ளது. அவர்களை விரைந்து காப்பாற்ற வேண்டும் என விக்னேஷின் தாயார் டெய்சிராணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையொட்டி, விக்னேஷுடன் பள்ளி, கல்லூரியில் படித்த நண்பர்கள் 20 பேர் பட்டியலை ஆஸ்டின்பட்டி போலீஸார் தயாரித்தனர். அவர்களை காவல் நிலையத்துக்கு நேற்று வரவழைத்து தனித்தனியே விசாரித்தனர். அவர்களது செல்போன்களும் ஆய்வு செய்யப்பட்டன. உடலில் காயங்கள் உள்ளனவா என சோதித்தனர்.

போலீஸாரின் கேள்விக்கு சரியாக பதில் அளிக்காத நிலையில், தேவைப்படும்போது, ஒத்துழைக்க வேண்டும் என 20 பேரிடமும் கடிதம் எழுதி வாங்கி அனுப்பியதாக ஆஸ்டின்பட்டி போலீஸார் தெரிவித்தனர். சம்பவத்துக்கு முன்பு விக்னேஷின் மாறுபட்ட நடவடிக்கை குறித்து அவரது குடும்பத்தினர் தவிர, அவர் வசித்த கலைஞர் நகர் பொதுமக்களிடமும் போலீஸார் நேற்று விசாரித்தனர். இது குறித்து மதுரை சைபர் கிரைம் போலீஸார் கூறியது:

விக்னேஷின் செல்போன் மூலம் பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். அவர் ‘ப்ளூவேல்’ விளையாட்டில் ஈடுபட்டதற்கான குறைந்தபட்ச தகவல் கிடைத்தாலும், இதை உறுதிபடுத்த தொழில்நுட்ப ரீதியான ஆதாரங்களை திரட்டி வருகிறோம். இதற்காக டெல்லியிலும், வெளிநாடுகளிலும் உள்ள தனியார் நெட்வோர்க் நிறுவனங்கள் மூலம் தகவல்களை திரட்டி வருகிறோம்.

இதன் மூலம் விக்னேஷை தற்கொலைக்கு தூண்டியவர்களை கண்டுபிடிக்க முடியும். அவருடன் மொபைல் இணைப்பில் இருந்து அடிக்கடி தகவல் பகிர்ந்த நண்பர்களிடமும் விசாரிக்கிறோம். ஆனால் அவர்கள் ஒத்துழைக்க மறுக்கின்றனர்.

இந்த விளையாட்டை பொறுத்தவரை ஆன்லைனில் மட்டுமே விளையாட முடியும். சமீபத்தில் இவ்விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் பழைய இணைப்பு மூலம் விக்னேஷ் சிக்கியிருக்கலாம். பெரும்பாலும், மொழி சிக்கல் காரணமாக இவ்விளையாட்டின் அடுத்தடுத்த உத்தரவுகள், உரையாடல் இன்றி, குறுந் தகவலாகவே பகிரப்படும்.

விளையாட்டின் இறுதி கட்டம் நெருங்கும்போது, விளையாட்டை ஆரம்பித்தவர் வீண் வம்புகளை பேசி இணைப்பில் இருப்பவர்களுக்கு கடும் நெருக்கடியை உருவாக்குவார். இதன் விளைவாக தற்கொலைக்கு தூண்டப்படுவதற்கு வாய்ப்புள்ளது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x