Published : 28 Feb 2023 07:06 AM
Last Updated : 28 Feb 2023 07:06 AM
சென்னை: தேசிய தூய்மை பணி ஆணையத்தின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த ம.வெங்கடேசன் 2-வது முறையாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ம.வெங்கடேசன், துணைத் தலைவராக ஜெய்ப்பூரை சேர்ந்த அஞ்சனா பன்வார், உறுப்பினராக கேரளாவை சேர்ந்த பி.பி.வாவா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரை பதவியில் இருப்பார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தமிழகத்தைச் சேர்ந்த ம.வெங்கடேசனை தலைவராக நியமித்தது. 2022-ம் ஆண்டு மார்ச் வரை பதவியில் நீடித்தார். 2-வது முறையாக இந்நிலையில், தற்போது 2-வது முறையாக மீண்டும் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவராக வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
எழுத்தாளரான ம.வெங்கடேசன், `இந்துத்துவ அம்பேத்கர்’, `எம்ஜிஆர் என்கிற இந்து' உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். 120 மாவட்டங்களில் ஆய்வு இதுகுறித்து ம.வெங்கடேசன் கூறியதாவது: ஏற்கெனவே நான் ஆணையத்தின் தலைவராக இருந்தபோது 24 மாநிலங்களில் 120 மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டு ஆய்வு கூட்டம் நடத்தி, தூய்மை பணியாளர்களுக்கான பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுத்திருக்கிறேன்.
அந்த வகையில், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் வழங்குவது, இஎஸ்ஐ, பிஃஎப், வார விடுமுறை உள்ளிட்ட பிரச்சினைகளில் தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன். அதன்படி, தூய்மை பணியாளர்களின் உரிமையை பெற்று தர பணிசெய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT