Published : 28 Feb 2023 04:14 AM
Last Updated : 28 Feb 2023 04:14 AM
சென்னை: சுகாதாரத் துறை சார்பில் ரூ.1,136 கோடியில் 44 மருத்துவமனைகளுக்கு இன்று அடிக்கல் நாட்டிவைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யும் திட்டத்தையும் தொடங்கிவைக்கிறார்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில், புதிய திட்டங்களை தொடங்கிவைக்கும் முதல்வர் ஸ்டாலின், மருத்துவமனைக் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், பணி நியமன ஆணைகளையும் வழங்குகிறார்.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பள்ளிக் குழந்தைகளின் நலனுக்காக செயல்படுத்தப்படும் முதல்வரின் காலை உணவுத் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஊட்டச்சத்து குறைவின்றி குழந்தைகள் ஆரோக்கியமாக வளர வேண்டும் என்ற நோக்கில், சமூகநலத் துறை மூலம் சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தூய்மைப் பணியாளர்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில், அவர்களது குடும்ப உறுப்பினர்களை ஒருங்கிணைத்து, தொழில்முனைவோராக மாற்ற தனியார் தன்னார்வ அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் திட்டம், சிற்பி திட்டம், இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும் இயக்கம், புதுமைப்பெண் உயர்கல்வி உறுதித் திட்டம், விவசாயிகளுக்கு 1.50 லட்சம் மின் இணைப்புகள் வழங்கும் திட்டம், மகளிருக்கு இலவச பேருந்துப் பயணச் சலுகை,மகளிர் சுயஉதவிக் குழு கடன் தள்ளுபடி, உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம், கள ஆய்வில்முதல்வர் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், பிப். 28-ம் தேதி (இன்று) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநலத் துறை மூலம் சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் தொடங்கப்படுகிறது.
திருநங்கைகளுக்கு மாதாந்திரஉதவித்தொகையை உயர்த்தி வழங்குதல், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனைப் பட்டா வழங்குதல், நகராட்சி நிர்வாகத்துறை மூலம் தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவோராக மாற்ற தனியாருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், ரூ.1,136 கோடியில் 44 மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டு விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதுதவிர, முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யும் திட்டமும் தொடங்கிவைக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT