Published : 28 Feb 2023 03:52 AM
Last Updated : 28 Feb 2023 03:52 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 74.79 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்த தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவையடுத்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கடந்த 25-ம் தேதி மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது.
இதையடுத்து, நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த தொகுதியில் உள்ள 2.27 லட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக, 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. வாக்குப்பதிவுக்காக 1,430 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 310 விவிபேட் இயந்திரங்கள், 286 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் பணியில் 1,206 அலுவலர்கள் ஈடுபட்டனர்.
5 இயந்திரங்கள் பழுது: வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டு இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நேற்று காலை மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் 5 இயந்திரங்கள் பழுதடைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவை மாற்றப்பட்டன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை முதலே வாக்காளர்கள் ஆர்வமுடன் காத்திருந்து, வாக்களிக்கத் தொடங்கினர். வீரப்பன்சத்திரம், பிராமண பெரிய அக்ரஹாரம், கருங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஏராளமான வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து, வாக்களித்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், கச்சேரி வீதி வாக்குச்சாவடியிலும், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, கருங்கல்பாளையம் வாக்குச்சாவடியிலும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த், மதரசா பள்ளி வாக்குச்சாவடியிலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன், கலைமகள் பள்ளி வாக்குச்சாவடியிலும் வாக்களித்தனர்.
வாக்குப்பதிவு தொடங்கிய 2 மணி நேரத்தில் 10.10 சதவீத வாக்குகள் பதிவாகின. காலை 11 மணிக்கு 27.89 சதவீதம், பகல் ஒரு மணிக்கு 44.56 சதவீதம், 3 மணிக்கு 59.22 சதவீத வாக்குகள் பதிவாகின. மாலை 5 மணிக்கு 70.58 சதவீத வாக்குகள் பதிவாகின.
வாக்குப்பதிவு தாமதம்: இந்த தொகுதியில் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டதால், 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இதனால், பல்வேறு இடங்களில் வாக்களிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், ராஜாஜிபுரம் பகுதியில் காத்திருந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழக்கப்பட்டு, இரவு வரை வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவக்குமார் கூறியதாவது:
ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 945 வாக்குகள் பதிவாகியுள்ளன. 82 ஆயிரத்து 21 ஆண்கள், 87 ஆயிரத்து 907 பெண்கள்மற்றும் 17 இதர வாக்காளர்கள் இடைத்தேர்தலில் வாக்களித்துள்ளனர். வாக்குப்பதிவு 74.79 சதவீதம்.
மாலை 6 மணிக்கு வாக்குச்சாவடியில் இருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல், வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
மார்ச் 2-ல் வாக்கு எண்ணிக்கை: ஈரோடு கிழக்கு தொகுதியில் 32 பதற்றமான வாக்குச்சாவடிகளில், கூடுதல் போலீஸாருடன், துணை ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மையமான சித்தோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வளாகம் முழுவதும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT