Published : 28 Feb 2023 06:02 AM
Last Updated : 28 Feb 2023 06:02 AM

நீதிபதியாக பதவியேற்றது வெறும் சாதனையல்ல, அதையும் தாண்டியது - புதிய கூடுதல் நீதிபதி வி.லட்சுமி நாராயணன்

சென்னை உயர் நீதிமன்ற புதிய கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள வி.லட்சுமி நாராயணனுக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா நேற்று பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அருகில் உயர் நீதிமன்ற நீதிபதிகள். படம்: ம.பிரபு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய கூடுதல் நீதிபதியாக வி.லட்சுமி நாராயணன் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கறிஞர்களாக பணியாற்றிய எல்.சி.விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன் மற்றும் மாவட்ட நீதிபதிகளாக பணியாற்றிய ஆர்.கலைமதி, கே.ஜி.திலகவதி ஆகியோர் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு பதவியேற்றுக் கொண்டனர். அந்தவரிசையில் தற்போது வழக்கறிஞராக பணியாற்றிய வி.லட்சுமி நாராயணனை புதிய கூடுதல் நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார்.

அதன்படி சென்னை உயர் நீதிமன்ற கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், புதிய கூடுதல் நீதிபதி வி.லட்சுமி நாராயணனுக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா நேற்றுபதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த பதவியேற்பு விழா நிகழ்வில் மூத்த நீதிபதிகள் எஸ்.வைத்யநாதன், ஆர்.மகாதேவன் உள்பட பலர் பங்கேற்றனர். புதிய நீதிபதியை தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம், பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் மற்றும் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் வரவேற்றுப் பேசினர்.

ஏற்புரையாற்றிய நீதிபதி வி. லட்சுமி நாராயணன், சட்டம் படிக்கத் தொடங்கியபோது மூத்த வழக்கறிஞரான தந்தை வெங்கடாச்சாரி இறந்துவிட்டதால் தாயார் தம்மை ஆளாக்கி வளர்த்ததையும், சகோதரரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி தந்தை இல்லை என்ற குறை தெரியாமல் பார்த்துக்கொண்டதையும் நினைவுகூர்ந்தார். பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்றது வெறும் சாதனையல்ல, அதையும் தாண்டியது என பெருமிதம் தெரிவித்தார்.

நீதிபதி வி.லட்சுமி நாராயணனுடன் சேர்த்து தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட மொத்த இடங்கள் 75-ல் தற்போது 17 நீதிபதி பணி யிடங்கள் காலியாக உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x