Published : 28 Feb 2023 06:14 AM
Last Updated : 28 Feb 2023 06:14 AM
சென்னை: நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் அதிநவீன வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இந்த ரயில்களின் தயாரிப்பை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னை ஐ.சி.எஃப்-ல் 2023-24-ம் நிதியாண்டில் 736 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன.
உலகப் புகழ்பெற்ற சென்னை பெரம்பூர் ஐ.சி.எஃப். தொழிற்சாலையில் தற்போது அதிநவீன வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் ஆர்வம் காட்டப்படுகிறது. இங்கு முதன்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ‘ரயில் 18’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. நாட்டிலேயே அதிக வேகத்தில் செல்லும் இந்த ரயிலுக்கு ‘வந்தே பாரத் ரயில்’ என்று பெயரிடப்பட்டது.
வந்தே பாரத் ரயில் சேவையை, புதுடெல்லி - வாரணாசி இடையே பிரதமர் மோடி 2019-ம்ஆண்டு தொடங்கி வைத்தார். இதன்பிறகு, டெல்லி-காத்ரா, காந்திநகர்-மும்பை, டெல்லி-யுனா (இமாச்சலப் பிரதேசம்), சென்னை- மைசூரு,பிலாஸ்பூர்-நாக்பூர், ஹவுரா-நியூ ஜல்பைகுரி, செகந்திராபாத்-விசாகப்பட்டினம், மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம்- சாய்நகர் ஷீரடி, சோலாப்பூர்-மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம் இடையே இயக்கப்படுகின்றன. இந்த வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதையடுத்து, வரும் நிதியாண்டில் ஐ.சி.எஃப். தவிர, உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி, மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர், அரியாணா மாநிலம் சோனிபட் ஆகிய 3 இடங்களில் உள்ள தொழிற்சாலைகளில் வந்தே பாரத் ரயில் தயாரிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும், வரும் நிதியாண்டில், வாரத்துக்கு 2 அல்லது 3 வந்தே பாரத் ரயில்களை தயாரித்து வழங்கவும், தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த மாதம் அறி வித்திருந்தார்.
இந்நிலையில், சென்னை ஐ.சி.எஃப்-ல் 2023-24-ம் நிதியாண்டில் 736 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படவுள்ளன. தலா 16 பெட்டிகளை கொண்ட 46 வந்தே பாரத் ரயில்கள் அல்லது தலா 8 பெட்டிகள் கொண்ட 92 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை ஐ.சி.எஃப்-க்கு ரயில்வேதுறை அனுப்பியுள்ளது. இதுதவிர, உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள நவீன பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலை, பஞ்சாப் மாநிலம் கபுர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை ஆகிய 2 தொழிற்சாலைகளில் தலா 168 பெட்டிகள் தயாரிக்கப்படவுள்ளன. இந்த 3 தொழிற்சாலைகளில் சேர்த்து மொத்தம் 1,047வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட வுள்ளன.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
நாடு முழுவதும் முக்கியமான வழித்தடங்களில் 400 வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே துறை திட்டமிட்டு உள்ளது. தூங்கும் வசதி கொண்டவந்தே பாரத் ரயில், பார்சல் ரயில், வந்தே மெட்ரோ, புறநகர் மின்சார வந்தே பாரத் ரயில் என 4 புது வடிவமைப்புகளில் படிப்படியாக தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர, ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயிலை தயாரிக்கவும் திட்டமிட்டப்பட்டுள்ளது.
ஐ.சி.எஃப் உள்பட 3 தொழிற்சாலைகளில் 2023-24-ம் நிதியாண்டுக்கு மொத்தம் 1,072 பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஐ.சி.எஃப்-ல் மட்டும் 736 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன. உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி நவீன பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலை, பஞ்சாப்மாநிலம் கபுர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை ஆகியவற்றில் தலா 168 பெட்டிகள் தயாரிக்கப்படவுள்ளன. மற்ற தொழிற்சாலைகளிலும் வந்தே பாரத் ரயில் பெட்டி தயாரித்து வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெறுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT