Published : 27 Feb 2023 09:35 PM
Last Updated : 27 Feb 2023 09:35 PM
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் 7 மணி நிலவரப்படி 74.69% வாக்குகள் பதிவாகியுள்ளதாக, தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், 7 மணி நிலவரப்படி 74.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆண்கள் 82 ஆயிரத்து 021, பெண்கள் 87 ஆயிரத்து 907, மூன்றாம் பாலினத்தவர்கள் 17 பேர் உள்பட மொத்தம் 1 லட்சத்து 69 ஆயிரத்து 945 பேர் வாக்களித்துள்ளனர். இது 74.69 சதவீதமாகும்.
ராஜாஜிபுரம் பள்ளியில் 138வது பூத்தில் மட்டும் டோக்கன் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு போதுமான அளவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு, தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த பூத்தில் கூலி வேலைக்கு செல்பவர்கள் அதிகமாக உள்ளனர். அதனால் அவர்கள் வேலைக்குச் சென்றுவிட்டு வந்துள்ளனர். அங்குள்ள 2 வாக்குச்சாவடிகளிலுமே 1400-க்கும் அதிகமாக வாக்குகள் உள்ளன. மற்றபடி எந்தப் பகுதியிலும் தவறுகள் நடக்கவில்லை. நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தேர்தல் விதிமீறல் தொடர்பாக நேற்று நள்ளிரவில் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்தில் இறுதி வாக்குப்பதிவு சதவீதம் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்படும். கடந்த தேர்தலைவிட இந்தமுறை வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது 74.69 சதவீதமாகியுள்ளது. இறுதி நிலவரம் இனிமேல் வரும். மண்டலங்கள் அடிப்படையில், ஒரு 6 மண்டலங்களில் வாக்குப்பதிவு நிறைவுபெற்றுள்ளது. மற்ற மண்டலங்களில் இறுதிக்கட்டப் பணிகள் நடந்துவருகிறது. அசாம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. மக்கள் சிறப்பான ஒத்துழைப்பைக் கொடுத்துள்ளனர்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT