Published : 27 Feb 2023 05:52 PM
Last Updated : 27 Feb 2023 05:52 PM
மதுரை: வீதிகள் தோறும் சென்று யாசகம் பெற்று சிறுக சிறுக சேமித்த ரூ.10,000-ஐ முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவரை மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளம், ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டி (72). கடந்த 1980-ம் ஆண்டு குடும்பத்துடன் மும்பையில் குடியேறிய பூல்பாண்டி, அங்கு சலவை தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இவரது மனைவி சரஸ்வதி கடந்த 24 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். தனது 3 பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்த பூல்பாண்டி, தனித்து வாழ்ந்து வந்த நிலையில், வீதிகள் தோறும் சென்று யாசகம் பெற்று கிடைத்த பணத்தை கொண்டு வாழ்ந்து வந்தார்.
யாசகம் எடுத்து கிடைத்த பணத்தை கொண்டு உணவு, உடைக்கு போக மீதியுள்ள பணத்தை பூல்பாண்டி சிறுக சிறுக சேமித்து வைக்கம் பழக்கத்தை கொண்டார். இவ்வாறு சேமித்த பணத்தை சமூக சேவைகளுக்கு பயன்படுத்த தொடங்கினார். மும்பையில் மரக்கன்று நட்டும், யாசகம் பெற்ற பணத்தில் பள்ளிகளுக்கு உதவி புரிந்து வந்தார். கரோனா கொடுங்காலத்தில் பூல்பாண்டி யாசகத்தால் கிடைத்த பணத்தை கரோனா நிதிக்கு வழங்கி தனது கருணை குணத்தை வெளிக்காட்டியவர், ஏழ்மையிலும் தயாள உள்ளத்தை மெய்பிக்கும் வகையில், இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதி கொடுத்து மனிதாபிமானத்தின் அடையாளமாக மாறினார்.
இந்நிலையில், தான் பிச்சை பெற்று சேர்த்து வைத்த ரூ.10 ஆயிரத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க இன்று சேலம் ஆட்சியர் அலுவலகத்துக்கு பூல்பாண்டி வந்தார். அவர் கூறும்போது, ”யாசகமாக கிடைக்கும் பணத்தை, முழுவதும் வைத்துக் கொள்ளவதை காட்டிலும், சமுதாய மேம்பாட்டுக்கான பணிகளை செய்ய செலவிடுவதில் ஆத்ம திருப்தி பெற்று வருகிறேன். அரசு பள்ளி கூடங்கள், கரோனா நிதி, இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்தும், முதல்வரின் நிவாரண நிதிக்கும் உதவி வருகிறேன். இனி வரும் காலங்களில் தொடர்ந்து யாசகம் பெற்று என்னால் முடிந்த மட்டிலும் பொது சேவைக்கான பணிகளுக்கு யாசகம் பெற்ற பணத்தை வழங்கிடுவேன்” என்றார்.
பின்னர், பூல்பாண்டி தான் கொண்டு வந்த ரூ.10 ஆயிரத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பும்படி, சேலம் ஆட்சியர் கார்மேகத்திடம் வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT