Published : 27 Feb 2023 07:12 PM
Last Updated : 27 Feb 2023 07:12 PM
மதுரை: மதுரையில் ரூ.80 கோடியில் போடப்பட்ட சாலை, ஒரே ஆண்டில் பாழாகியுள்ள நிலையில், மாநகராட்சி என்ஓசி கொடுக்காததால் புதிய சாலையை நெடுஞ்சாலைத் துறை போடவில்லை என மக்கள் ஆதங்கமடைந்துள்ளனர். மாநகராட்சி என்ஓசி (பணி முடிந்ததிற்கான) கொடுக்காததால் பாதாளசாக் கடை, குடிநீர் திட்டப் பணிகள் முடிந்தும் கடந்த ஓர் ஆண்டிற்கு மேலாக மோசமாக காணப்படும் மதுரை மாட்டுத்தாவணி - ஆணையூர் சாலையை நெடுஞ்சாலைத் துறை புதிதாக போடாமல் உள்ளதால் மக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பஸ்நிலையம் முதல் சர்வேயர் காலனி, மூன்றுமாவடி, அய்யர் பங்களா, உச்சப்பரம்பு மேடு, முதல் ஆணையூர் வரை 5 கி.மீ., தொலைவிற்கு செல்லும் மாநகர நெடுஞ்சாலைத்துறை சாலை உள்ளது. இந்த சாலை மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பஸ்நிலையத்தையும், திண்டுக்கல் செல்லும் மதுரை - பைபாஸ் சாலையும் இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.
திண்டுக்கல், காளவாசல், பாத்திமா கல்லூரி ரவுண்டானா, தத்தனேரி, கூடல் நகர் செல்வோர் நகர்பகுதிக்கு வராமல் இந்த சாலையில் எளிதாக அந்த பகுதிகளுக்கு செல்லலாம். இந்த சாலையை மாநில நெடுஞ்சாலைத் துறை ரூ.80 கோடியில் கடந்த 3 ஆண்டிற்கு முன்தான் போட்டது. இந்த பிரமாண்ட சாலை புதிதாக போட்டு ஒரு ஆண்டிற்கும் குறைவாகவே மக்கள், வாகன ஓட்டிகள் பயன்படுத்தி இருப்பார்கள். அதற்குள் மாநகராட்சி, பாதாள சாக்கடை, பெரியார் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகளுக்காக நாலுமாவடி முதல் ஆணையூர் வரை இந்த சாலையை தோண்டி குழாய்களை பதித்தனர். மாநகராட்சிக்கும், நெடுஞ்சாலைத் துறைக்கும் இடையே சரியான திட்டமிடுதல், ஒருங்கிணைப்பு இல்லாததாலே, போட்ட 6 மாதங்களிலேயே இந்த சாலை பாழ்படுத்தப்பட்டது.
மாநகராட்சி தோண்டிய குழிகளை சரியாக மூடாமல் போட்டு சென்றதால் 5 கி.மீ., தொலைவிற்கு இந்த சாலை முழுவதுமாக குண்டும், குழியுமாக உள்ளது. சாலை பிரமாண்டமாக இருந்தாலும், சாலையின் ஒரு பகுதி குழாய் பதிக்க தோண்டியதால் அந்த பகுதி மண் சாலையாக குண்டும், குழியுமாக இருப்பதால் அதனை வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாது. அதனால், இரவில் வருவோர் சாலை குண்டும், குழியுமாக இருப்பது தெரியாமல் கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர்.
இந்த சாலையில் நாலுமாவடி முதல் குலமங்கலம் விலக்கு ரோடு வரை சாலையின் நடுவில் 8 முதல் 10 அடி கால்வாய் பள்ளம் உள்ளது. இந்த கால்வாய் பள்ளத்தை சிமெண்ட் மூடிகள் போட்டு மூடாமல் திறந்த வெளியிலே உள்ளது. ஆங்காங்கே இந்த கால்வாய் ஓரம் சிறு திண்டுகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. அதனால், சாலையில் குண்டும், குழியில் தடுமாறி விழும் வாகன ஓட்டிகள் நேராக இந்த குழிகளில் விழுகின்றனர். பலர் தலை, கை, கால்களில் அடிப்பட்டு அவர்கள் எதிர்காலம் பாதிக்கப்பட்டிருக்கிறது.
பாதாளசாக்கடை, குடிநீர் திட்டப்பணிகள் முடிந்தும் மாநகராட்சியால் தோண்டி பாழாக்கப்பட்ட இந்த சாலையை நெடுஞ்சாலைத்துறை தற்போது புதிதாக போடவில்லை. கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக இந்த சாலை மிக மோசமாக காணப்படுகிறது. இந்த சாலையில் பெரும்பாலும் கூடல்நகர், ஆணையூர், குலமங்கலம், ஊமச்சிகுளம், அய்யர் பங்களா போன்ற புறநகர் கிராமப்பகுதிகளுக்கு செல்வோர் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். விஐபிகள், அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், அதிகாரிகள் பெரும்பாலும் இந்த சாலையை பயன்படுத்துவதில்லை. அதனால், மாநகராட்சியும், நெடுஞ்சாலைத்துறையும் இந்த சாலையை போடுவதற்கு ஆர்வம் காட்டவில்லையோ? என்று மக்கள் ஆதங்கமடைந்துள்ளனர்.
நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: ''பாதாளசாக்கடை மற்றும் குடிநீர் திட்டப்பணிகள் முடிந்துவிட்டதாக கூறி மாநகராட்சி இதுவரை எங்களுக்கு ஒர்க் கம்ளிட் சர்டிபிகேட் (என்ஓசி) கொடுக்க வேண்டும். ஆனால், அவர்கள் தற்போது வரை கொடுக்கவில்லை. ஆனால், இந்த சாலை போடுவதற்கான பணத்தை மாநகராட்சியும், குடிநீர்வடிகால் வாரியமும் டெபாசிட் செலுத்திவிட்டார்கள். ஆனால், அவர்கள் கூறிய அளவை விட சாலையை கூடுதலாக தோண்டியுள்ளனர். மாநகராட்சி என்ஓசி கொடுத்ததும் உடனடியாக நாலுமாவடி முதல் ஆணையூர் வரை புதிதாக சாலை போடப்படும். இதுபோல், காளவாசல்-பழங்காநத்தம், பழங்காநத்தம்-திருநகர் உள்ளிட்ட நகரின் பிற சாலைகளும் இதே பிரச்சனையால் புதிதாக போட முடியாமல் தவிக்கிறோம்''என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT