Published : 27 Feb 2023 05:46 PM
Last Updated : 27 Feb 2023 05:46 PM
சென்னை: “பல்வேறு குழப்பங்களுடன் நடைபெற்ற குரூப்-2 முதன்மைத் தேர்வை ரத்து செய்து விட்டு, வேறொரு தேதியில் எவ்வித குளறுபடியுமில்லாமலும், உரிய பாதுகாப்பு வசதிகளுடளும் இத்தேர்வை நடத்திட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து இன்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு அறிவிக்கப்பட்டது. அதன்படி 2022 மே 21ல் முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டு 55,071 பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இவர்களுக்கான முதன்மை தேர்வு (மெயின்ஸ் தேர்வு) நேற்று முன்தினம் (25.2.2023) நடந்தது. மதுரை, சிதம்பரம், சென்னை உள்ளிட்டு சில தேர்வு மையங்களில் வினாத்தாளில் உள்ள பதிவெண்கள் மாறி மாறி இருந்துள்ளதும், வினாத்தாள்கள் திரும்ப பெற்றதும், கால தாமதமாக தேர்வுகள் நடந்துள்ளதும் பெரும் குளறுபடிகளும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சில மையங்களில் உள்ள தேர்வர்கள் வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்கான விடைகளை தங்களின் செல்போன், புத்தகங்களில் படித்து தேர்வு எழுதியதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. 2019-ம் ஆண்டிற்கு பிறகு நடைபெற்ற தேர்வு என்பதால் இரவு - பகலாக பயிற்சிகளை மேற்கொண்டு தங்களை தயார்படுத்திக் கொண்டு தேர்வு எழுதிய இளைஞர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தையும், அச்சத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, பல்வேறு குழப்பங்களுடன் நடைபெற்ற குரூப் 2 முதன்மைத் தேர்வை ரத்து செய்து விட்டு, வேறொரு தேதியில் எவ்வித குளறுபடியுமில்லாமலும், உரிய பாதுகாப்பு வசதிகளுடளும் இத்தேர்வை நடத்திட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது'' என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT