Published : 27 Feb 2023 04:50 PM
Last Updated : 27 Feb 2023 04:50 PM
சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை ரூ.12.35 கோடி நிதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதாக மத்திய அரசு 2015 பிப்.28-ம் தேதி அறிவித்தது. பல்வேறு இழுபறிக்குப் பிறகு, மருத்துவமனை அமைக்க 2018-ல் மதுரை தோப்பூர் தேர்வானது. 2019 ஜன.27-ம் தேதி பிரதமர் மோடி மதுரைக்கே வந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை.
இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 2024-ம் ஆண்டு இறுதியில் பணிகள் தொடங்கி, 2028-ம் ஆண்டில்தான் முடிவடையும் என்று ஜப்பான் நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார். தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று, ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் வகுப்புகள் நடந்து வருகின்றது.
இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை இதுவரை ரூ.12.35 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய சுகாதாரத் துறை, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட ரூ.1977 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் ரூ.12.53 கோடி மட்டுமே தற்போது வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. மேலும், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் அக்டோபர் 2026-ம் ஆண்டு நிறைவுடையும் என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "மதுரை எய்ம்ஸுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை ரூ.12.35 கோடி மட்டுமே. இது RTI கேள்விக்கான பதில். இதையே நாடாளுமன்றத்தில் நாங்கள் கேட்டிருந்தால் அமைச்சர் கொந்தளித்திருப்பார். “தனியார் கல்லூரிகளின் ஏஜென்ட்கள்” என்று வசையைத் துவக்கி “கழுத்தை நெரிப்பது” வரை பேசியிருப்பார்" என்று தெரிவித்துள்ளார்.
மதுரை எய்ம்ஸ்க்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை ரூ.12.35 கோடி மட்டுமே.
இது RTI கேள்விக்கான பதில்.
இதையே நாடாளுமன்றத்தில் நாங்கள் கேட்டிருந்தால் அமைச்சர் கொந்தளித்திருப்பார்.
“தனியார் கல்லூரிகளின் ஏஜென்ட்கள்” என்று வசையைத் துவக்கி “கழுத்தை நெரிப்பது” வரை பேசியிருப்பார். pic.twitter.com/iA3zhXjao7— Su Venkatesan MP (@SuVe4Madurai) February 27, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT