Published : 27 Feb 2023 02:56 PM
Last Updated : 27 Feb 2023 02:56 PM

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக வி.லட்சுமிநாராயணன் பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக வி.லட்சுமிநாராயணன் பதவியேற்றுக் கொண்டார்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக வி.லட்சுமிநாராயணன் திங்கள்கிழமை (பிப்.27) பதவியேற்றுக் கொண்டார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 58ஆக உயர்ந்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், அவருக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.புதிய நீதிபதியாக பதவியேற்றுக் கொண்ட லட்சுமி நாராயணனை, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் மற்றும் பல்வேறு வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் வரவேற்று பேசினர்.

இந்த நிகழ்வில் ஏற்புரையாற்றிய நீதிபதி வி.லட்சுமிநாராயணன், "சட்டம் படிக்கத் தொடங்கியபோது தந்தை இறந்து விட்டதால், எனது அம்மாதான் என்னைப் படிக்கவைத்து ஆளாக்கினார். எனது சகோதரரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, தந்தை இல்லை என்ற குறை தெரியாமல் என்னைப் பார்த்துக் கொண்டார்.நீதிபதியாக பொறுப்பேற்றது சாதனையைவிட மேலானது" என்று பேசினார்.

நீதிபதி வி.லட்சுமி நாராயணனுடன் சேர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில், 17 பணியிடங்கள் காலியாக உள்ளன.

நீதிபதி லட்சுமிநாராயணன்: கடந்த 1970ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி வழக்கறிஞர் வெங்கடாச்சாரி - சரோஜா தம்பதிக்கு மகனாக பிறந்தவர் லட்சுமி நாராயணன். புரசைவாக்கம் எம்.சி டி.முத்தையா செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பும், வைஷ்ணவ் கல்லூரியில் பட்டப்படிப்பும் முடித்தார். பெங்களூருவில் உள்ள தேசிய சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்துள்ளார்.

கடந்த 1995ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்த அவர், கடந்த 30 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், தீர்ப்பாயங்களில் பல்வேறு வழக்குகளில் ஆஜரானதுடன், சட்டம் பற்றி 350 கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x