Published : 27 Feb 2023 02:46 PM
Last Updated : 27 Feb 2023 02:46 PM
சென்னை: புதுடெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மீது பொய் வழக்கு புனைந்து, மத்திய புலனாய்வு நிறுவனத்தை ஏவிவிட்டு பாஜக அரசு கைது செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
2021-22ம் ஆண்டுக்காக டெல்லி மதுபானக் கொள்கையை வகுத்ததிலும், செயல்படுத்தியதிலும் முறைகேடு நடந்ததாகக் கூறி டெல்லி ஆளுநர் சிபிஐ விசாரனைக்கு பரிந்துரை செய்தார். ஆனால் மதுபானக் கொள்கையை அரவிந்த் கேஜ்ரிவால் அரசு கைவிட்ட பிறகும் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கு விசாரணையை பல மாதங்கள் நடத்திய சிபிஐ, நேற்று மணிஷ் சிசோடியாவை விசாரணைக்கு அழைத்தது. அப்போது பாஜக அரசு தன் மீது பழிவாங்கும் வகையில் போலி வழக்கில் கைது செய்ய முனைந்துள்ளது என்று கூறிவிட்டுச் சென்றார். அவர் எதிர்பார்த்தபடியே கைது செய்யப்பட்டு இருக்ககிறார். ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடத்தும் டெல்லி மாநிலத்தில் ஆளுநர் மூலம் பாஜக இரட்டை ஆட்சி நடத்தி வருகிறது. எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கு சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளை பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது.
அடுத்து முதல்வர் கேஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என்று டெல்லி பாஜக தலைவர் கபில்மிஸ்ரா கொக்கரிக்கிறார். அடக்குமுறை மூலம் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை முடக்கலாம் என்று பாஜக நினைப்பது பகல் கனவாகவே முடியும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.'' இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT