Published : 27 Feb 2023 09:48 AM
Last Updated : 27 Feb 2023 09:48 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் காலை 9 மணியளவில் 10.10% வாக்குப் பதிவாகியுள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு சரியாக இன்று (பிப்.27) காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே மக்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இத்தேர்தலில் வாக்களிக்க 2.27 லட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் காலை 9 மணியளவில் 10.10% வாக்குப் பதிவாகியுள்ளது. 9 மணி நிலவரப்படி 22 973 வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையாற்றியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாம் தமிழர் வேட்பாளர் வாக்களிப்பு: வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன், தொகுதிக்கு உட்பட்ட கலைமகள் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் பேட்டியளித்த அவர், "வீதியில் இறங்கி போராடாத நிலை வேண்டுமென்றால் மக்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். தேர்தல் ஏற்பாடுகள் திருப்தியளிக்கின்றன. மாலைவரை இதே நிலை நீடிக்க வேண்டும். மக்கள் வாக்களிக்க ஆர்வத்துடன் காத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதனால் எனது வெற்றிவாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக உணர்கிறேன்" என்றார்.
5 இயந்திரங்கள் மாற்றம்: மாதிரி வாக்குப்பதிவின்போது 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தது கண்டறியப்பட்டு, புதிய இயந்திரங்களைப் பொருத்தி வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அனைத்து இடங்களிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது என ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் எச்.கிருஷ்ணன் உன்னி தெரிவித்தார். மேலும் படிக்க: பழுதடைந்த 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்: ஈரோடு ஆட்சியர் தகவல்
கரை வேட்டியை மாற்றிவிட்டு கடமையாற்றிய தேமுதிக வேட்பாளார்: தேமுதிக வேட்பாளர் ஆனந்த் கருங்கல்பாளையம் காவல் நிலையம் எதிரே உள்ள அக்ரஹாரம் பள்ளி வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்தார். அப்போது அவர் கட்சிக் கரை வேட்டி, துண்டு அணிந்துவந்தார். இதற்கு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அவர் உடனடியாகச் சென்று வேறு உடை மாற்றிவந்து வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேர்தல் நடத்தும் அலுவலர்களின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. இளம் வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆர்வத்துடன் செயல்படுத்த வேண்டும்" என்று கோரிக்கைவிடுத்தார்.
ஈவிகேஸ் இளங்கோவன் கருத்து: ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள மாநகராட்சி துவக்கப் பள்ளியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலை சுமார் 9 மணியளவில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் மை அழிவது புகார் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், "என்னிடம் அப்படி ஒரு நிகழ்வு பற்றிச் சொன்னார்கள். இன்னும் அதுபற்றி விரிவாக நான் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை. நான் வாக்களிக்கும் போது என் கையில் மை வைக்கப்பட்டது. 10 நிமிடம் ஆகியும் அப்படியே இருக்கிறது. தேர்தலில் காமராஜர் தோற்றபோது, அவரிடம் வாக்காளர்களுக்கு வைக்கப்பட்ட மை சரியில்லை என்று சொன்னார்கள். மை யாவது, மண்ணாங்கட்டியாவது. மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். அவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். ஆகவே, அநாவசியமாக மை மீது குற்றச்சாட்டை வைக்காதீர்கள் என்று அவர் சொல்லியிருக்கிறார். அதே வாதம் இப்போதும் பொருந்தும். " என்று கூறிச் சென்றார். விரிவான செய்திக்கு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | ஈவிகேஎஸ் இளங்கோவன் வாக்களிப்பு: கை சின்னத்திற்கே மக்கள் வாக்கு என நம்பிக்கை
32 பதற்றமான வாக்குச்சாவடிகள்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர 5 கம்பெனி துணை ராணுவத்தினர், 4 கம்பெனி தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகன் தெரிவித்தார். மேலும் படிக்க: 32 பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு: ஈரோடு எஸ்.பி. சசிமோகன் பேட்டி
களத்தில் 77 வேட்பாளர்கள்: ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா காலமானதை அடுத்து, இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, இன்று (பிப்.27) வாக்குப்பதிவு நடக்கிறது. காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் மற்றும் சுயேச்சைகள் உட்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 1.11 லட்சம் ஆண்கள், 1.16 லட்சம் பெண்கள் உட்பட மொத்தம் 2.27 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் மொத்தம் 1,206 அலுவலர்கள் பணியாற்றுகின்றனர்.
மார்ச் 2ல் வாக்கு எண்ணிக்கை: வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் 1,430 வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர்கள் வாக்களித்ததை உறுதிப்படுத்தும் 310 விவிபாட்இயந்திரங்கள், 286 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் (கன்ட்ரோல் யூனிட்) அனைத்தும் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT