Published : 27 Feb 2023 09:35 AM
Last Updated : 27 Feb 2023 09:35 AM

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | ஈவிகேஎஸ் இளங்கோவன் வாக்களிப்பு: கை சின்னத்திற்கே மக்கள் வாக்கு என நம்பிக்கை

வாக்கினை பதிவு செய்து ஈவிகேஎஸ் இளங்கோவன் | படங்கள்: எஸ்.குருபிரசாத்.

சென்னை: திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது வாக்கினை பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து கை சின்னத்திற்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.

ஈரோடு கச்சேரி சாலையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த பின்பு, காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில்,"ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற கூட்டணியின் வேட்பாளர் இளங்கோவனுக்கு எனது வாக்கினை நான் செலுத்தியுள்ளேன். அதேபோல், ஈரோடு கிழக்கு வாக்காளர்கள் கை சின்னத்திற்குத்தான் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. குறிப்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலினின் கரங்களை பலப்படுத்தவும், அவரது 20 மாத நல்ல ஆட்சியின் அடையாளமாக இந்த வெற்றி கண்டிப்பாக அமையும். அதேபோல் ராகுல் காந்தியின் நடைபயணத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த தேர்தல் முடிவு கண்டிப்பாக இருக்கும்.

வரும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்தத் தேர்தல் முடிவு அமையும். எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. என்றைக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதோ, அன்றைக்கே மதச்சார்பற்ற கூட்டணியின் வேட்பாளர் வெற்றி பெறுவார் என, என் பெயர் அறிவிப்பதற்கு முன்பே மக்கள் முடிவு செய்துவிட்டனர். எனவே, மிகப்பெரிய வெற்றியாக இது அமையும்.

வரிசையில் காத்திருந்த ஈவிகேஎஸ்

வாக்கு வித்தியாசத்தை என்னால் சொல்ல முடியாது. இருந்தாலும் மிகப்பெரிய வெற்றியாக அமையும். எதிரணியில் இருப்பவர்கள் இதுவரை சந்திக்காத தோல்வியை சந்திப்பார்கள். தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்ற பேதம் இல்லாமல், சில தேர்தல் அலுவலகங்களை மூடினார்கள். அனுமதி பெறாமல் நடைபெற்ற தேர்தல் அலுவலகங்களை மூடிவிட்டனர். எனவே, தேர்தல் நல்லபடியாக, நேர்மையாக நடக்கிறது.

நான் வாக்களிக்கும் போது என் கையில் மை வைக்கப்பட்டது. 10 நிமிடம் ஆகியும் அப்படியே இருக்கிறது. தேர்தலில் காமராஜர் தோற்றபோது, அவரிடம் வாக்காளர்களுக்கு வைக்கப்பட்ட மை சரியில்லை என்று சொன்னார்கள். மை யாவது, மண்ணாங்கட்டியாவது. மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். அவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். ஆகவே, அநாவசியமாக மை மீது குற்றச்சாட்டை வைக்காதீர்கள் என்று அவர் சொல்லியிருக்கிறார். அதே வாதம் இப்போதும் பொருந்தும்.

கையில் மை வைக்கப்படுகிறது.

வாக்குச்சாவடியில் ஆதார் அட்டையை ஏன் ஆவணமாக ஏற்க மறுத்தார்கள் என்பது தெரியவில்லை. எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை, இந்த தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால், விமர்சனங்களை அள்ளி வீசுகிறார்கள். ஆளுங்கட்சியின் மீது, அவர்கள் தேவையில்லாத பொய்யான குற்றச்சாட்டுகளை பதிவு செய்து இருக்கிறார்கள்." இவ்வாறு அவர் தெரிவித்த்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x