Published : 27 Feb 2023 08:41 AM
Last Updated : 27 Feb 2023 08:41 AM

32 பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு: ஈரோடு எஸ்.பி. சசிமோகன் பேட்டி

படம்: எஸ்.குருபிரசாத்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர 5 கம்பெனி துணை ராணுவத்தினர், 4 கம்பெனி தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகன் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியவுடன் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். ஈரோடு சம்பத் நகர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தின் பாதுகாப்பு பணிகளை இன்று ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகன் பார்வையிட்டார்.

பின்னர் சசிமோகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர 5 கம்பெனி துணை ராணுவத்தினர், 4 கம்பெனி தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர 5 ஏ.டி.எஸ்.பி.கள், 15 டி.எஸ்.பி.கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 20-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 32 பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் போலீஸாருடன், கூடுதலாக துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சுற்றி 200 மீட்டருக்குள் அரசியல் கட்சியினர் யாரும் உள்ளே வர அனுமதி இல்லை. 200 மீட்டருக்கு அப்பால் அரசியல் கட்சியினர் இரண்டு சேர் டேபிள் வைத்து அமர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வாக்களிக்க வரும் பொது மக்களுக்கு பூத்சிலீப் வழங்கலாம் ஆனால் அதில் கட்சி சின்னம் எதுவும் இருக்கக் கூடாது. இதை கண்காணிக்கவும் தனியாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இது தவிர போலீஸார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருவார்கள். 238 வாக்குச்சாவடி மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எனவே மக்கள் தயக்கம் இல்லாமல் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x