Published : 27 Feb 2023 06:33 AM
Last Updated : 27 Feb 2023 06:33 AM
சென்னை: தொல்காப்பியம் நூலின் ஒலி வடிவிலான செல்போன் செயலியை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தொல்காப்பியம் தமிழில் மிகப் பழமையான நூலாகும். அதில் காணப்படும் சில வழக்காறுகள், இலக்கணக் கூறுகள், வாழ்க்கை மரபுகள் ஆகியவை சங்க இலக்கிய நூல்களுக்கும் முற்பட்டவை. இதனால் அது ‘தமிழ் முதல் நூல்’ என்று போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தொல்காப்பியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை 2021-ம் ஆண்டு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டது.
இசையுடன் ஒலிக்கும்: அதைத் தொடர்ந்து, தொல்காப்பியம் சார்ந்த செல்போன் செயலியை வடிவமைக்கும் முயற்சியில் செம்மொழி நிறுவனம் ஈடுபட்டு வந்தது. அதன் பலனாக சிஐசிடி தொல்காப்பியம் எழுத்து (PHONOLOGY & MORPHOLOGY MOBILE APPLICATION) என்ற
பெயரில், எழுத்து அதிகாரத்துக்கான துக்கான செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் செம்மொழி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த செயலியில் தொல்காப்பியப் பாடல்கள் இசையுடன் (முற்றோதல்) ஒலிக்கும்.
பேராசிரியர் பாவலரேறு ச.பாலசுந்தரத்தின் தொல்காப்பியம் எழுத்து ஆராய்ச்சிக் காண்டிகை உரையும் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆங்கில மொழிபெயர்ப்பிலும் உரையை
கேட்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஆண்ட்ராய்டு தளத்தில்..
அடுத்தகட்டமாக, தொல்காப்பியத்தின் சொல் மற்றும் பொருள் அதிகாரங்களின் செயலிகள் ஆண்ட்ராய்டு தளத்தில் வெளியிடப்படும். இந்த செயலியை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் இரா.சந்திரசேகரன் வழிகாட்டுதலில், இளநிலை ஆய்வு வளமையர் கி.கண்ணன் வடிவமைத்துள்ளார். ஒலி வடிவில் வெளிவரும் செயலியால் பள்ளி, கல்லூரி, ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும்
பார்வை குறைபாடு உடையவர்கள் பயன்பெறுவர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT