Published : 27 Feb 2023 06:17 AM
Last Updated : 27 Feb 2023 06:17 AM
சென்னை: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி இந்த திட்டத்தை தொடங்க அரசு முடிவெடுத்துள்ளது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை திமுக அளித்தது. அதில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டமும் ஒன்று. தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்த நிலையில், இந்ததிட்டம் உடனடியாக அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த திட்டத்தில் பயன்பெறுவதற்காக, குடும்ப அட்டையில் குடும்பத் தலைவருக்குப் பதில், பெண்கள் தங்கள் பெயரை மாற்றிக்கொண்டனர். எனினும், இவ்வாறு பெயர் மாற்ற அவசியம் இல்லைஎன்று பின்னர் அரசு தெளிவுபடுத்தியது.
அதேநேரத்தில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரைபயின்று, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு, மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி நிதியுதவித் திட்டம் அறிவிக்கப்பட்டது. அந்த திட்டத்தின் மூலம் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
எதிர்க்கட்சிகள் விமர்சனம்: இதற்கிடையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தாதது குறித்து எதிர்க்கட்சிகள் அவ்வப்போது விமர்சித்து வருகின்றன. இது தொடர்பாக கணக்கெடுக்கும் பணிநடந்து வருவதாகவும், விரைவில் இந்த திட்டம் குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு வந்தது.
பட்ஜெட்டில் அறிவிப்பு: இந்நிலையில், இந்த திட்டம்குறித்த கணக்கீடு முடிந்துள்ளதாகவும், இதுகுறித்து தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்பட்டது. இரு தினங்களுக்கு முன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘‘குடும்பத் தலைவிகளுக்கு மாதம்ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி இந்த திட்டத்தைத் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேறு எந்த உதவித்தொகையும் பெறாத, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பெண்கள், அந்த்யோதயா அன்னயோஜனா குடும்ப அட்டை பெற்றுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் வகையில் இந்த திட்டம்வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும், அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள தமிழக பொது பட்ஜெட்டில் இதைஅறிவித்து, விரைவில் அரசாணை வெளியிடப்பட உள்ளதாகவும் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT