Published : 27 Feb 2023 06:03 AM
Last Updated : 27 Feb 2023 06:03 AM

தமிழகத்தில் பால் தட்டுப்பாடு இல்லை: ஆவின் நிர்வாகம் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லை என்று ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஆவின் நிறுவனம் வாயிலாக தினமும் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது பால் கொள்முதல் 29.50 லட்சம் லிட்டர் முதல் 30 லட்சம் லிட்டராகக் குறைந்துள்ளது. இது சில்லறை விற்பனைக்கே போதுமானதாக இல்லாததால், வெண்ணெய், பால் பவுடர், நெய் உள்ளிட்ட பால் உப பொருட்கள் தயாரிப்பு குறைந்துள்ளது.

வெளி மாநிலங்களிலும் பால் பற்றாக்குறை நிலவுவதால், அங்கும் வெண்ணெய் தயாரிப்பு குறைந்துள்ளது. இதையடுத்து, தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் விற்பனை இணையதளம் வாயிலாக, வெளி மாநிலங்களில் இருந்து வெண்ணெய் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பால் கொள்முதல் குறைந்ததால், தூத்துக்குடி, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆவின் பாலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த தகவலை ஆவின் நிர்வாகம் மறுத்துள்ளது. எங்கும் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆவின் அதிகாரிகள் கூறியதாவது: தற்போது தினமும் பால் கொள்முதல் 29.50 லட்சம் லிட்டர் முதல் 30 லட்சம் லிட்டர் என்ற அளவில் உள்ளது. கொள்முதலும், தேவையும் சரியாக இருப்பதால், இருப்புவைக்க முடியவில்லை. இவ்வாறு கொள்முதல் செய்யும் பாலைப் பதப்படுத்தி தயார் செய்வதில் ஏற்படும் தாமதத்தால், மதுரை, தூத்துக்குடியில் சில இடங்களில் பால் விநியோகம் தாமதமாகியது. அதேநேரத்தில், பால் தட்டுப்பாடு எதுவும் ஏற்படவில்லை. பால் தேவையை முற்றிலுமாகப் பூர்த்தி செய்ய முடியும்.

வெண்ணெய் கொள்முதல்: நாடு முழுவதும் பால் உற்பத்திகுறைந்துள்ளது. தேவையைப் பூர்த்தி செய்ய வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும்போது, பிரச்சினை சரியாகிவிடும். வெண்ணெய் தேவை அதிகரித்தால், வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x