Published : 27 Feb 2023 06:56 AM
Last Updated : 27 Feb 2023 06:56 AM
உதகை: உதகை தாவரவியல் பூங்காவில் சோதனை முயற்சியாக ஹாலந்து நாட்டின் துலிப் செடிகள் நடவு செய்யப்பட்டதில், தற்போது மலர்கள் பூத்துள்ளன.
நூற்றாண்டு பழமைவாய்ந்த உதகை தாவரவியல் பூங்காவை, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச் செல்கின்றனர்.
சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் நூற்றுக்கணக்கான ரகங்களில் லட்சக்கணக்கான மலர்களையும் காட்சிப்படுத்தி வருகின்றனர். இதுமட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் இருந்தும் வண்ண, வண்ண மலர்களை இறக்குமதி செய்து, மலர் மாடங்களை பூக்களால் அலங்கரித்து வருகின்றனர்.
இதேபோல, ஹாலந்து நாட்டிலிருந்து துலிப் மலர்களை இறக்குமதி செய்து காட்சிக்கு வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்நிலையில், சோதனை முயற்சியாக ஹாலந்து நாட்டின் துலிப் மலர்களை உற்பத்தி செய்ய திட்டமிட்ட பூங்கா அதிகாரிகள், அங்கிருந்து துலிப் விதை கிழங்குகளைப் பெற்று, பூங்கா நாற்றங்காலில் கவனமாக பராமரித்து வந்துள்ளனர். நன்கு வளர்ந்து வந்த துலிப் செடிகளில் மலர்கள் பூக்கத் தொடங்கியுள்ளன.
இதையடுத்து, வரும் சீசன்களில் அதிக எண்ணிக்கையிலான துலிப்மலர் செடிகளை உற்பத்தி செய்து,சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்து படைக்க திட்டமிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறும்போது, “கோடை சீசன் சமயங்களில் ஹாலந்து நாட்டிலிருந்து துலிப் மலர்களை இறக்குமதி செய்வதுதான் வழக்கம். குளிர்ந்த காலநிலையில் வளரும் இந்த மலர்களை, நமது பூங்கா நாற்றங்காலில் வளர்க்கத் திட்டமிட்டோம். அதற்காக 20 விதை கிழங்குகளை பெற்று நடவு செய்தோம். ஒரு வேளை தண்ணீர், 6 மணி நேரம் இளம் வெயில், எலிகளிடமிருந்து கிழங்குகளைப் பாதுகாக்க தனி இடம் எனக் கூடுதல் கவனத்துடன் பராமரித்து வந்தோம்.
தற்போது இளஞ்சிவப்பு, வெள்ளை, சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களில் துலிப் மலர்கள்பூத்துள்ளன. அதிக எண்ணிக்கையிலான துலிப் செடிகளை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT