Published : 27 Feb 2023 04:15 AM
Last Updated : 27 Feb 2023 04:15 AM

கோவில்பட்டியில் நான்கு வழிச்சாலையில் இறக்கிவிடப்படும் பயணிகள் - அரசு பேருந்துகளின் விதிமீறலால் பறிபோகும் உயிர்கள்

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது பெரிய நகரமாக கோவில்பட்டி உள்ளது. கோவில்பட்டியில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் புறவழிச் சாலையில் 3.64 ஏக்கரில் கூடுதல் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.

ஆனால், கூடுதல் பேருந்து நிலையத்தின் எதிரே உள்ள அணுகு சாலையில் நின்று தான் அரசு விரைவு பேருந்துகள் பயணிகளை ஏற்றி இறக்குகின்றன. ஆம்னி பேருந்துகள் அணுகு சாலைக்கு கூட வருவதில்லை. நான்குவழிச்சாலையில் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் மேம்பாலம் முடிவடையும் பகுதியிலேயே நின்று பயணிகளை இறக்கிச் செல்கின்றன.

அதிகாலை நேரங்களில் அரசு விரைவு பேருந்துகளும் நான்குவழிச்சாலையில் தான் நின்று செல்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை மதுரையில் பணி முடித்து அரசு பேருந்தில் கோவில்பட்டி திரும்பிய சிப்காட் பெண் அதிகாரி ஒருவர் நான்குவழிச்சாலையில் இறக்கிவிடப் பட்டார். அவர் சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி பரிதாப மாக உயிரிழந்தார். இதற்கு முன்னர் இதுபோன்ற விபத்துகள் அதிகம் நடந்துள்ளன.

விளக்குகள் இல்லை: இது குறித்து சமூக ஆர்வலர் அ.ஜெயபிரகாஷ் நாராயணசாமி கூறும்போது, “புதிய கூடுதல் பேருந்து நிலையம் மணியாச்சி ஊராட்சி பகுதியில் உள்ளது. கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலம் பாதியில் இருந்து கூடுதல் பேருந்து நிலையம் வரை மின் விளக்குகள் கிடையாது.

இது குறித்து கேட்டால் எங்களுக்கு வருமானமில்லை என ஊராட்சி நிர்வாகமும், எங்கள் எல்லையில்லை என, நகராட்சி நிர்வாகமும் கை விரிக்கின்றன. தற்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அணுகு சாலைகளில் மின் விளக் குகள் அமைத்து வருகிறது. இதனை ஊராட்சி, நகராட்சி நிர்வாகம் உடனடியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே, இந்த பேருந்து நிலையம் தொடர்பாக ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் தலைமையில் நடந்த கருத்து கேட்பு கூட்டங்களில், இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை கோவில்பட்டி நகருக்குள் போக்குவரத்து நெருக்கடி இருக்காது. எனவே, மதுரை, திருநெல்வேலி மார்க்கங்களில் இருந்து வரும் அனைத்து தனியார் மற்றும் அரசு பேருந்துகளும் அண்ணா பேருந்து நிலையத்துக்கு வந்து செல்ல வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை அரசு அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். ஆனால், இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. ஆட்சியரின் உத்தரவை செயல்படுத்தி இருந்தால் விபத்துகளை தவிர்த்திருக்கலாம்” என்றார். வழக்கறிஞர் ம.சிவா கூறும்போது, “அதிகாரிகள் அபராதம் விதித்தும் பேருந்துகள் தொடர்ந்து சட்டத்தை மீறி வருகின்றன.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த விபத்தில் உயிரிழந்த பெண் அதிகாரி வந்த அரசு பேருந்தை இயக்கிய ஊழியர்கள், அதனை கண்காணிக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநெல்வேலி மார்க்கத்தில் இருந்து வரும் பேருந்துகள், புதிய கூடுதல் பேருந்து நிலையம் முன்புள்ள அணுகு சாலைக்கு வராமல் நான்கு வழிச் சாலையிலேயே நின்று சென்றதால் விபத்துகள் தொடர் கதையாகின.

அதனால், அங்கு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டன. ஆனாலும், தடுப்பு கம்பிகள் பாலத்தின் எல்லை வரை மட்டுமே உள்ளதால், பேருந்துகள் அங்கு சென்று நிற்கின்றன. அதனால் தடுப்பு கம்பிகளை பாலத்தின் பாதி பகுதி வரை அமைக்க வேண்டும். அதே போல், மதுரை மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் நான்கு வழிச் சாலையில் நிற்பதை தவிர்க்க, அப்பகுதி முழுவதும் தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும்” என்றார்.

தீர்வு வேண்டும்: மதுரை மார்க்கத்தில் இருந்து வரும் பேருந்துகள் நான்குவழிச்சாலையில் இருந்து இடப்புறமாக அணுகு சாலை வழியாக இனாம் மணியாச்சி விலக்குக்கு வந்து, பயணிகளை இறக்கிவிட்டு செல்லலாம். இதனால் பாதுகாப்பு இருக்கும். மதுரையில் இருந்து வரும் பேருந்துகள் அணுகு சாலையில் நிற்பதால், அதற்காக வெயிலில் பயணிகள் காத்திருக்கும் நிலை தொடர்கிறது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதே கோவில்பட்டி மக்களின் விருப்பம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x