Published : 26 Feb 2023 04:21 PM
Last Updated : 26 Feb 2023 04:21 PM

சாலை விபத்தில் பலியான 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்

சென்னை: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பலியான 4 பேரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே பயணிகளை ஏற்றி சென்றுகொண்டிருந்த சரக்கு வாகனம் எதிர்பாராத விதமாக கவிழ்ந்ததில் சரோஜா (50), பூங்கொடி(48), கிட்டுசாமி (45), மற்றும் தமிழரசி (17) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இச்சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடன், செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனை உடனடியாக விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, ஆறுதல் கூறி அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திட அனுப்பி வைத்துள்ளேன். மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பழனி (50), வளர்மதி (26), இந்துமதி (23), மற்றும் செல்வி.காயத்ரி (12) ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.'' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x