Published : 26 Feb 2023 03:12 PM
Last Updated : 26 Feb 2023 03:12 PM
செங்கல்பட்டு: தாம்பரத்தில் தேஜஸ் ரயில் நின்று செல்ல வேண்டும் என்று எம்பியாக பதவியேற்கும் முன்பே ரயில்வே துறைக்கு கடிதம் கொடுத்ததாக திமுக எம்பி டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
தாம்பரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மற்றும் ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் சென்னை - மதுரை இடையே இயக்கப்படும் இருமார்க்க தேஜஸ் விரைவு ரயில், தாம்பரத்தில் நிற்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், சென்னையிலிருந்து மதுரைக்கு இருமார்க்கத்திலும் இயக்கக் கூடிய தேஜஸ் விரைவு ரயில், இன்று (பிப்.26) முதல் சோதனை அடிப்படையில் 6 மாத காலங்களுக்கு தாம்பரத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டிருந்தார்.
இதன் தொடக்க விழா தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனும், திமுக எம்பி டி.ஆர்.பாலுவும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டி.ஆர்.பாலு கூறியதாவது: "தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல வேண்டும் என்பதற்காக கடந்த ஆண்டு மே மாதம் 30ம் தேதி ரயில்வே ஆணைய தலைவரை நேரடியாக சந்தித்து அதற்கான கடிதத்தை திமுக சார்பில் கொடுத்தேன்.
நாங்கள் பதவியேற்றது ஜுன் 18ம் தேதி. ஆனால் அதற்கு முன்பாக மே 30ம் தேதியே தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் இந்த கடிதத்தைக் கொடுத்தேன். அதன் தொடர் நடவடிக்கையாகத்தான் தற்போது தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நிற்பதற்கான தொடக்கவிழாவைப் பார்க்கிறேன்.
கடந்த 2.1.2020ல் ரயில்வே பொது மேலாளராக இருந்த ஜான் தாமஸை சந்தித்து அவரிடம் ஒரு கடிதம் கொடுக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் தற்போதைய ரயில்வே அமைச்சரைச் சந்தித்து கடிதம் கொடுத்தோம். இறுதியாக 23.12.2022 மற்றும் 8.2.2023 ஆகிய தேதிகளில் ரயில்வே அமைச்சரைச் சந்தித்து கடிதம் கொடுத்தோம். நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தநிலையில், எப்படியாவது இதனை நிறைவேற்றித் தருவதாக கூறியிருந்தனர். அதன்படி இன்று தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்கிறது" என்று அவர் கூறினார்.
முன்னதாக, இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகை தந்திருந்த திமுகவினரும், பாஜகவினரும் மாறிமாறி கோஷங்களை எழுப்பினர். இந்த சம்பவத்தால் தாம்பரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT