Published : 26 Feb 2023 01:31 PM
Last Updated : 26 Feb 2023 01:31 PM
சென்னை: ஆலந்தூர் மண்டலம் மற்றும் பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ. 447.03 கோடி மதிப்பீட்டில் 120.55 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி மூலமாக பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மழை வெள்ள காலங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பின்றியும், போக்குவரத்திற்கு இடையூறின்றி செல்லும் வகையிலும் , மழைநீரானது சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்காமல் வடிந்து செல்லும் வகையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டு, அதனடிப்படையில் பல்வேறு மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டன. இதன் காரணமாக இந்த ஆண்டு மழை மற்றும் மாண்டஸ் புயலின் போதும் மழைநீர் சாலைகளில் தேங்காமல் புதியதாக கட்டப்பட்ட மழைநீர் வடிகால்கள் வாயிலாக நீர்நிலை ஆறுகள் மற்றும் கால்வாயில் அனுப்பப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் எவ்வித இடர்பாடின்றியும், போக்குவரத்துக்கு இடையூறின்றியும் சென்றிட வழிவகை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து நகராட்சி நிருவாகத் துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படியும் சென்னைப் பெருநகர மேயரின் ஆலோசனையின்படியும் கோவளம் வடிநிலப்பகுதியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால் அமைக்கும் பணியானது KFW என்ற ஜெர்மன் நாட்டு வங்கி நிதியுதவியுடன் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி ரூபாய் 1714 கோடி மதிப்பீட்டில் 300 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது .
இதில் முதற்கட்டமாக ஆலந்தூர் மண்டலம் மற்றும் பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட நங்கநல்லூர் முதல் பிரதான சாலை, 6ஆவது பிரதான சாலை, ஹிந்து காலனி, கண்ணன் காலனி, ராம் நகர், சீனிவாச நகர், குபேரன் நகர், எல்ஐசி நகர் ஆகிய பகுதிகளில் ரூபாய் 150. 47 கோடி மதிப்பீட்டில் 39 . 7 8 கிலோமீட்டர் நீளத்திற்கு ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக ஆலந்தூர் மண்டலம் மற்றும் பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட புவனேஸ்வரி நகர், பாலாஜி நகர், ராதா நகர், மடிப்பாக்கம், அன்னை சத்யா நகர், லட்சுமி நகர், குபேரன் நகர் மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலத்தில் உள்ள எம். சி .என் நகர், விஜிபி அவென்யூ, சந்திரசேகர் அவென்யூ, ஜவஹர் நகர் ஆகிய பகுதிகளில் ரூபாய் 447.03 கோடி மதிப்பீட்டில் 120.55 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி மூலமாக பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் 24 மாதங்களில் முடிக்கப்படும் இதனால் இப்பகுதிகளில் வசிக்கும் 8 லட்சம் பொதுமக்கள் பயனடைவார்கள்.
இப்பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறின்றி தகுந்த தடுப்புகள் அமைத்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் இதனை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதிசெய்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT