Published : 26 Feb 2023 12:42 PM
Last Updated : 26 Feb 2023 12:42 PM
ஈரோடு: ஈரோடு கிழக்கு தேர்தல் களத்தில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, சீமான் உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், இந்த தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போவது பிரச்சாரங்களா அல்லது தொகுதி முழுவதும் பரவலாகக் கொடுக்கப்பட்ட பரிசுப் பொருட்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி மற்றும் அமைச்சர்கள், காங்கிரஸ் சார்பில் கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து எதிர்கட்சித்தலைவர் பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும், தேமுதிக வேட்பாளர் ச.ஆனந்தை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா, விஜய பிரபாகரன், சுதீஷ் உள்ளிட்டோரும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் பிரச்சாரம் செய்தனர்.
தொடங்கியவர் பழனிசாமி: இடைத்தேர்தலில் அனல்பறக்கும் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தவர் எதிர்கட்சித்தலைவர் பழனிசாமி. கூடாரங்களில் வாக்காளர்கள் அடைத்து வைக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டிய பழனிசாமி, ‘மீசை வைச்ச, வேட்டி கட்டிய ஆம்பளையாக இருந்தால், வாக்காளர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும்’ என ஆவேசப்பட்டார். அவரது பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், திமுக எம்பி கனிமொழி, அமைச்சர் உதயநிதி ஆகியோரின் பிரச்சாரங்கள் அமைந்தன.
மீண்டும் செங்கல் பிரச்சாரம்: இந்த தேர்தலிலும் உதயநிதி, மதுரை எய்ம்ஸ் விவகாரத்தை நினைவுபடுத்தும் வகையில் செங்கல்லை கட்டி பிரச்சாரம் செய்ய, அவருக்கு பதில் கொடுக்கும் வகையில், திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட தருமபுரி தொழிற்பேட்டை திட்டம் தொடங்கப்படவில்லை எனக்கூறி, பாஜக தலைவர் அண்ணாமலையும் ஒரு ‘செங்கல்லை’ காட்டி பேட்டியளித்தார்.
ரஜினியை பயன்படுத்திய அதிமுக: உதயநிதி தனது பிரச்சாரத்தில் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட மதுரை நூலகம், கிங்ஸ் மருத்துவமனை படங்களைக் காட்டியதோடு, எதிர்கட்சித்தலைவர் பழனிசாமி கூவத்தூரில் இருந்த நிகழ்வு படத்தையும் காட்டி அதிமுகவினரை வெறுப்பேற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தில், நீட் தேர்வு குறித்து நளினி சிதம்பரம் பேசியது, முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் ஆகியவற்றை எல்.இ.டி. திரையில் திரையிட்டு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அதோடு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் விடுத்த வீடியோ குறித்த செய்தியை படித்துக் காட்டி ரஜினி ரசிகர்களை வளைக்க பழனிசாமி முயன்றார்.
திட்டங்களின் பட்டியல்: கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை எதிர்கட்சித்தலைவர் பழனிசாமி தனது பிரச்சாரத்தில் பட்டியலிட்டார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரால் உரிய பதிலை கொடுக்கவில்லை. கடந்த 22 மாதத்தில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு குறிப்பிட்டு சொல்லக்கூடிய எந்த திட்டமும் செயல்படுத்தப்படாததே இதற்குக் காரணம். அதேநேரத்தில், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம், கனி ஜவுளிச்சந்தை வளாகம், மாநகராட்சி வணிக வளாகம் என எதுவும் பயன்பாட்டுக்கு வராததை சுட்டிக்காட்டிய திமுக, ஈரோடு கிழக்கு தொகுதியில் சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ரூ 1000 கோடி வரை திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் கூறியது.
விசைத்தறியாளர் விவகாரம்: ஈரோடு கிழக்கு தொகுதியில் கணிசமாக உள்ள விசைத்தறியாளர்களுக்கான இலவச மின்சார அளவு அதிகரிப்பு, மின் கட்டணம் குறைப்பு போன்ற அரசின் உத்தரவுகளை முன் நிறுத்தி மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம் செய்தார். அதிருப்தியில் உள்ள அரசு ஊழியர், ஆசிரியர்களின் வாக்குகளை வளைக்கும் வகையில், ‘படிக்காத பாமரர்கள் மட்டுமல்லாது, படித்த அரசு ஊழியர்களையும் இந்த அரசு ஏமாற்றுகிறது’ என்ற எதிர்கட்சித்தலைவரின் பிரச்சாரத்திற்கு, திமுக தரப்பில் பதில் இல்லை. மாறாக, முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிரச்சாரத்தில், கொடநாடு விவாகாரம், அதிமுக கூட்டணி குழப்பம் உள்ளிட்ட விவகாரங்கள் எழுப்பப்பட்டன.
முற்றுப்புள்ளி வைத்த முதல்வர்: பெண்களுக்கான உரிமைத்தொகை வழங்கவில்லை என்பதை மையப்படுத்தி அதிமுக பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில், இறுதி நாள் பிரச்சாரத்தில், மார்ச் மாத நிதிநிலை அறிக்கையில் இதுகுறித்து அறிவிப்பு வரும் என அறிவித்து இந்த விவகாரத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்தார்.
கவனம் கவர்ந்த நாம் தமிழர்: திமுக – அதிமுக இடையே இத்தகைய பிரச்சாரமும், பணம், பரிசுப்பொருள்கள் விநியோகமும் பரபரப்பாக நடக்க, ஈரோடு தேர்தல் களத்தில் நாம் தமிழர் கட்சியும் வாக்காளர்களின் கவனத்தை கவர்ந்தது. தொண்டர்களுடன் காலை, மாலை பிரச்சார ஊர்வலம், இரவில் பொதுக்கூட்டம் என திட்டம் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இரவில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் 30 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், சிறுபான்மையினர், பெண்களின் பங்கேற்பு, வேறு எந்த அரசியல் கட்சி பிரச்சாரத்திலும் பார்க்க முடியவில்லை. குறிப்பாக, தலைவர்களின் பிரச்சார நாட்களில் வேறு தொகுதிகளில் இருந்து திமுகவும், அதிமுகவும் கூட்டத்தை திரட்டிக் காட்ட, அதுபோல் இல்லாமல் நாம் தமிழர் கட்சி கூட்டங்களுக்கு அடர்த்தியாகக் கூடிய கூட்டம், அவர்கள் ஏற்கனவே பெற்ற வாக்கு சதவீதத்தை இரு மடங்காக கூட்டும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அருந்ததியர் விவகாரம்: பிரச்சாரத்தின் இறுதி நாட்களில், போக்குவரத்து சிக்னல் தோறும், விவசாயி சின்னத்துடன் இருவரை நிற்க வைத்தது நாம் தமிழர் கட்சியின் சிறப்பான பிரச்சார உத்தியாகக் கருதப்படுகிறது. அதோடு, யு டியூப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் சீமானின் தேர்தல் பிரச்சார வீடியோ லட்சக்கணக்கில் பகிரப்பட்டுள்ளதும், பார்க்கப்பட்டுள்ளதும் கவனிக்க வைத்துள்ளது. நாம் தமிழர் - திமுக இடையே ஏற்பட்ட மோதலும், அருந்ததியர் குறித்த சீமான் பேச்சும், அதன் காரணமாக வந்த எதிர்ப்பு, வன்கொடுமை வழக்கு போன்றவை இடைத்தேர்தலின் பரப்பரப்பான காட்சிகளாக அமைந்தன.
தேமுதிகவின் பிரச்சாரம்: இந்த மூன்று கட்சிகளோடு ஒப்பிடுகையில், தேமுதிகவும் தேர்தல் களத்தில் உள்ளது என்கிற அளவுக்கு அவர்களின் பிரச்சாரம் அமைந்திருந்தது. தேர்தல் களத்தில் வாக்குகளை கவர்வதில் பிரச்சாரம் என்பது முக்கிய காரணியாகவே இதுவரை இருந்து வந்துள்ளது. ஆனால், ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பரவலாக விநியோகிக்கப்பட்ட பணம், 20 வகையான பரிசுப்பொருட்கள் ஆகியவை பிரச்சாரத்தின் தாக்கத்தை குறைத்துவிட்டதோ என்ற கேள்வியையே எழுப்பி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT