Published : 26 Feb 2023 11:01 AM
Last Updated : 26 Feb 2023 11:01 AM
சென்னை / விருத்தாசலம்: அரசுத் துறைகளில் தாய்மொழியான தமிழ் பயன்பாட்டில் சுணக்கம் நிலவுவதாக ஆதங்கம் தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என பாடினான் மகாகவி பாரதி. அத்தகைய சிறப்புமிக்க தமிழ் மொழி, தமிழகத்தின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பதற்காக 1956-ம் ஆண்டு ஆட்சி மொழிச் சட்டம் முன்மொழிவு கொண்டு வரப்பட்டது. ஆளுநரின் ஒப்புதல் கிடைத்த பின்னர் 1957 ஜன.23-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது.
அதே நேரம் அலுவல் முறை நோக்கங்களுக்காக ஆங்கிலம் தொடர்ந்து பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நடைமுறையும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், வேறெந்த மாநிலத்திலும் மொழிக் கென்று தனித் துறை இல்லாத சூழலில், தமிழகத்தில் தமிழ் மொழியின் மேம்பாட்டுக்காக பிரத்யேகமாக தமிழ் வளர்ச்சித் துறை ஏற்படுத்தப்பட்டு பல்வேறுசீரிய செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இத்துறை அலுவலர்கள் இடையே தமிழ் மொழியின் மகத்துவத்தை உணர்த்தும் விதமாக ஆண்டுதோறும் உலக தாய்மொழி தினமான பிப்ரவரி 21-ம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு ஆட்சிமொழிச் சட்ட வாரம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ள அலுவலர்களுக்கு தமிழில் குறிப்புகள் தயாரித்தல், தமிழிலேயே கையொப்பமிடுதல் உள்ளிட்ட பயிற்சிகளை அளித்து அதை ஆண்டு முழுவதும் ஆய்வு செய்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர பயிற்சி தந்து அதற்கு மதிப்பெண் அளிக்கின்றனர்.
மேலும்,மற்ற அரசுத் துறைகளின் பணியாளர்களுக்கும் தமிழ் பயன்பாட்டை அதிகரிக்க ஆட்சி மொழி பயிலரங்கம் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. இத்தகைய முன்னெடுப்புகள் இருந்தும் அரசுத் துறைகளில் தாய் மொழியான தமிழ் பயன்பாட்டில் ஊழியர்கள் இடையே சுணக்கம் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.
முதல்வர் மற்றும் தலைமைச் செயலர் மட்டுமே தமிழில் கையெழுத்திடும் நடைமுறையை பின்பற்றுகின்றனர். ஆனால், பல்வேறு அமைச்சர்கள் மற்றும் அரசுத் துறைகளின் பணியாளர்கள் அதை முறையாகப் பின்பற்றுவதில்லை. அரசு ஊழியர்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மத்திய அரசு பணி சார்ந்துள்ளதால், அவர்களுக்கு விதிவிலக்கு அளிப்பதில் தவறில்லை.
ஆனால், மற்ற அதிகாரிகள், பணியாளர்கள் அலுவலகப் பணிகளில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் வழங்காமல் இருப்பது ஏற்புடையதல்ல. இது தவிர மாவட்ட அளவில்தமிழ் வளர்ச்சித் துறையை மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட 8 மாவட்டங்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை ஏற்படுத்தப்பட வில்லை.
20-க்கும் மேற்பட்ட உதவி இயக்குநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் அரசு கூடுதல் கவனம் செலுத்தினாலே தமிழ் வளர்ச்சித் துறையின் செயல்பாடுகள் பொதுமக்களை எளிதில் சென்றடையும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இது தொடர்பாக தமிழ் வளர்ச்சித் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: அரசு ஊழியர்களுக்கான ஆட்சி மொழி பயிலரங்கம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட மருத்துவத் துறை சார்ந்த பணியாளர்களுக்கு சென்னையில் பயிற்சி தரப்பட்டது. இதேபோல், அரசு துறைகளில் தமிழ் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
துறை சார்ந்த காலிப் பணியிடங்களை பொருத்த வரை வாய்ப்புள்ள பணிகளுக்கு தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்படுகிறது. உதவி இயக்குநர் உள்ளிட்ட உயர் பதவிகளை நிரப்புவதற்கு அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்த பின் விரைவில் பணியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...