Published : 26 Feb 2023 04:05 AM
Last Updated : 26 Feb 2023 04:05 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், நாளை (27-ம் தேதி) வாக்குப்பதிவு நடக்க உள்ளது. ஈரோட்டில் நேற்று பிரச்சாரம் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டார். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அதிமுக சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா காலமானதை அடுத்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, நாளை (27-ம்தேதி) வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் மற்றும் சுயேச்சைகள் உட்பட 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 1.11 லட்சம் ஆண்கள், 1.16 லட்சம் பெண்கள் உட்பட மொத்தம் 2.27 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க 52இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, கூடுதலாக 48 வாக்குச்சாவடி மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 32வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் போலீஸார், துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வாக்குச்சாவடிகளில் 1,206 அலுவலர்கள் பணிபுரிய உள்ளனர்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று காலை 11 மணி முதல், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படுகின்றன.
நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, காலை 7 மணிக்கு முகவர்கள் முன்னிலையில், மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, பின்னர், அந்த வாக்குகள் அழிக்கப்படும். இதைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி,மாலை 6 மணிக்கு நிறைவடையும். வாக்குப்பதிவு முடிந்ததும், போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், சித்தோட்டில் உள்ள ஐஆர்டிடி பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு, பூட்டி ‘சீல்’ வைக்கப்படும்.
மார்ச் 2-ல் வாக்கு எண்ணிக்கை: வாக்கு எண்ணிக்கை மார்ச்2-ம் தேதி காலை 8 மணிக்குதொடங்குகிறது. ஒருசில மணிநேரங்களில் முன்னிலை நிலவரம் தெரியவரும். மாலையில் முடிவு அறிவிக்கப்படும்.
இதற்கிடையே, ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து வந்த பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. இதையொட்டி, அனைத்து கட்சி தலைவர்களும் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் முழுவீச்சில் ஈடுபட்டனர். காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அதிமுக வேட்பாளர் தென்னரசை ஆதரித்து இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி பிரச்சாரம் செய்தார். தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் வேட்பாளர் மேனகா உள்ளிட்டோரும் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
ஈரோட்டில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘சட்டப்பேரவை பொதுத்தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகளில் 85 சதவீதத்தை இதுவரை நிறைவேற்றியுள்ளோம். எஞ்சியுள்ள 15 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்ற இன்னும்3 ஆண்டுகள் இருந்தாலும், இந்தஆண்டு முடிவதற்குள்ளாகவே அவற்றை நிறைவேற்றுவோம்.
தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றுள்ள, குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் தேதி, மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளதமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்’’ என்று அறிவித்தார்.
இந்நிலையில், முதல்வரின் இந்த அறிவிப்பு தேர்தல் விதிமீறல் என்று அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் அதிமுக புகார் கொடுத்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமாரிடம், அதிமுக தேர்தல் பிரிவு துணை செயலாளர் இன்பதுரை கொடுத்துள்ள புகாரில்,‘ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என்ற தேதி பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று பேசியுள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பு, தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது. இதனால், அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment