Published : 26 Feb 2023 06:55 AM
Last Updated : 26 Feb 2023 06:55 AM
சென்னை: ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுபடி ஆகாது. எனவே, அவற்றின் அடிப்படையில் அதிமுக கட்சி விதிகளில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என்று தேர்தல் ஆணையத்துக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
அதிமுகவில் கடந்த ஆண்டு ஒற்றைத் தலைமை சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டுஜூலை 11-ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமியை தேர்ந்தெடுத்தும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 3 பேரை கட்சியில் இருந்து நீக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த விவகாரத்தில் இரு தரப்பும் மாறி மாறிநீதிமன்றத்தை நாடிய நிலையில், ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 23-ம் தேதி தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ள இபிஎஸ்தரப்பினர், இத்தீர்ப்பின் அடிப்படையில் அதிமுக சட்ட விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என கேட்டுள்ளனர்.
இந்த நிலையில், தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் நேற்று முன்தினம் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதிநடைபெற்ற அதிமுக பொதுக்குழு, சட்டத்துக்கு உட்பட்டு கூட்டப்பட்டதா, இல்லையா என்று மட்டுமேபரிசீலித்த உச்ச நீதிமன்றம், அந்த பொதுக்குழு செல்லும் என்று கடந்த 23-ம் தேதி தீர்ப்பளித்துள்ளது.
ஆனால், ‘பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா, செல்லாதா என்பதைநாங்கள் ஆய்வுக்கு உட்படுத்தவில்லை. அந்த விவகாரத்துக்குள் நாங்கள் செல்லவில்லை. தீர்மானங்களால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெறலாம்’ என்று தீர்ப்பின் 35-வது பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘தீர்மானங்கள் தொடர்பாக நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளில், இந்த தீர்ப்பு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது’ என்று தீர்ப்பின்38-வது பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம், பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பான பிரச்சினைக்கு மட்டுமே உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது தெளிவாகிறது.
இதைக் கருத்தில் கொண்டு,பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக ஒரு சிவில் வழக்கை தாக்கல் செய்யஉள்ளேன். நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளையும் முழு அளவில் தொடர்ந்து நடத்த உத்தேசித்துள்ளேன்.
மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளும் இன்னும் காலாவதி ஆகவில்லை. அந்த பதவிக்காலம் 2026-ம் ஆண்டில்தான் முடிவடைகிறது. இதனால், அந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுபடியாகாது.
எனவே, ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் கட்சி விதிகளில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம். அதில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டால், ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்கில் எனதுசட்டப்பூர்வ உரிமைகள் கடுமையாக பாதிக்கப்படும். ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும். இவ்வாறு அதில் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT