Published : 26 Feb 2023 07:03 AM
Last Updated : 26 Feb 2023 07:03 AM
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களை ஒரு இடத்தில் அடைத்து வைத்து திமுக - காங்கிரஸ் கூட்டணி தினமும் ரூ.500 கொடுத்து புதிய லஞ்ச முறையை உருவாக்கியுள்ளனர். அதனால், இந்த இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டுமென தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் நேற்று புகார் மனு அளித்தார்.
பின்னர், ஜெயராம் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதிய முறை: ஈரோடு கிழக்குத் தொகுதிஇடைத்தேர்தலில் வாக்காளர்களை ஒரு இடத்தில் அழைத்துக் கொண்டு வந்து, அங்கு அமர வைத்து தினமும் ரூ.500 பணம்கொடுத்து புதியதாக லஞ்சம்கொடுக்கக்கூடிய முறையை திமுக, காங்கிரஸ் இந்த இடைத்தேர்தலில் உருவாக்கியுள்ளது. இவைதவிர பல்வேறு பரிசுப் பொருட்கள் கொடுப்பதும் ஊடகங்களில் வெளிவந்து கொண் டுள்ளது.
அதிமுகவும் சில இடங்களில் பணம் கொடுத்துள்ளனர். இதற்கான ஆதாரங்களை இணைத்து அறப்போர் இயக்கம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து கொடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டுமென கோரிக்கை வைத்திருக்கிறோம். தேர்தல் ஆணையம் உடனடியாக தேர்தலை ரத்து செய்யக்கூடிய நடவடிக்கையும், வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.
ஒரு நியாயமான, நேர்மையான தேர்தல் நடப்பதற்கான வாய்ப்பே இல்லாத நிலை உள்ளது. இதை மீறி நடந்தால் ஜனநாயகம் கேலிக்கூத்தாக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறோம். தலைமை தேர்தல் அதிகாரி இந்த ஆதாரங்களை பரிசீலித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தனது பரிந்துரைகளை அனுப்புவதாக கூறியிருக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT