Published : 04 Sep 2017 11:06 AM
Last Updated : 04 Sep 2017 11:06 AM
நீலகிரி மாவட்டம் உதகை நகரின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது அதிக அளவில் உச்சரிக்கப்படும் வார்த்தை, ‘மேக் ஊட்டி பியூட்டிஃபுல்’. இது, உதகை நகரை அழகுபடுத்துவது தொடர்பாக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு தன்னார்வ அமைப்பு. நகரை தூய்மையாக மாற்றினாலே, அழகு தானாக வந்துவிடும் என்பதே இந்த அமைப்பினரின் எண்ணம்.
உதகை நகரில் அவர்கள் செய்வதெல்லாம் இதுதான். வாரந்தோறும் நகரில் ஏதாவது ஒரு பகுதியைத் தேர்வு செய்து, அங்கு குவிந்துள்ள குப்பையை அகற்றுவதோடு, அனைத்து வகையான சுகாதாரப் பணிகளையும் மேற்கொள்கின்றனர். இந்த அமைப்பில் பெரும்பாலானோர் பெண்கள். சுமார் 30 பேர் கொண்ட இக்குழுவினர், நகரில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளும்போது, அதை பார்ப்போரும் உதவ முன்வருகின்றனர்.
இவர்கள் சுகாதாரப் பணியின்போது மஞ்சள் நிறத்தினாலான மேலாடையைப் பயன்படுத்துவதால், சாலைகளில் நடந்து செல்வோர் தெருவில் தூக்கியெறிய நினைக்கும் குப்பையை இவர்கள் வசமுள்ள குப்பைத் தொட்டிகளில் போட்டுச் செல்கின்றனர். இவர்களுடன் சேர்ந்து ஒத்துழைக்க விரும்புவோரும், இந்த அமைப்பினரிடம் தன்னார்வத் தொண்டர் என்ற அடையாள அட்டையையும், பிளாஸ்டிக் கையுறைகளையும் வாங்கிக் கொள்ளலாம்.
இதுதொடர்பாக அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஷோபனா கூறும்போது, ‘தொடக்கத்தில் சுற்றுலா பகுதிகளைச் சுற்றிலும், பின்னர் சுற்றுலா பகுதிகளுக்குச் செல்லும் வழிகளையும் தூய்மைப்படுத்துகிறோம். மேலும், உதகை நகரின் அனைத்துப் பகுதிகளிலும் தூய்மை முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
நகரை தூய்மையாக்கல் என்பது கடினமான விஷயம். இருப்பினும், அதை அரசுதான் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தை விடுத்து, சம்பந்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் நாமும் உறுதுணையாக இருப்போம் என்பதை வெளிக்காட்டவே, இத்தகைய முயற்சிகள்’ என்றார்.
இவர்களைபோலவே, நகரிலுள்ள நடைபாதைகளை கலைநயத்துடன் புதுப்பித்து வருகின்றனர் மெக்கேன்ஸ் கட்டிடவியல் கல்லூரி மாணவர்கள். நடைபாதைகளை ஒட்டியுள்ள சுவர்களில் பயன்படாத பொருட்களைக் கொண்டு, தங்கள் கை வண்ணத்தை காட்டியுள்ளனர்.
இந்த மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களின் முயற்சியால் மாற்றத்தை உணர்கின்றனர் உதகை நகர பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT