Published : 25 Feb 2023 09:15 PM
Last Updated : 25 Feb 2023 09:15 PM
மதுரை: ‘இந்தியாவில் நீதிபதிகள் நியமனத்துக்கு தனி அமைப்பு அவசியம் என்றும், கொலீஜியம் முறையில் வெளிப்படைத் தன்மை இல்லை’ என்றும் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தெரிவித்துள்ளார்.
மதுரையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் உயர் நீதிமன்ற மதுரை கிளை சார்பில், ‘நீதிபதிகள் நியமனமும் - சவால்களும்’ என்ற தலைப்பில் இன்று கருத்தரங்கு நடைபெற்றது. வழக்கறிஞர் எல்.ஷாஜிசெல்லன் தலைமை வகித்தார். வழக்கறிஞர்கள் என்.முத்துஅமுதநாதன், ஆர்.செளரிராஜன், பி.கிறிஸ்டோபர், சி.கிஷோர், எஸ்.பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு பேசியதாவது: "இந்தியாவில் கொலீஜியம் முறையில் நீதிபதிகள் நியமிக்கப்படுகின்றனர். இந்த முறையில் வெளிப்படைத் தன்மை இல்லை. ரகசியம் காக்கப்படுகிறது. அரசியலமைப்பு சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் நீதிபதிகளாக வருகின்றனர். இந்தியாவில் நீதிபதிகள் நியமனத்துக்கு தேசிய நீதிபதிகள் ஆணையம் அமைக்கப்பட்டது.
அந்த ஆணையத்தில் 3 நீதிபதிகள், நீதிபதிகள் அல்லாத 3 பேர் உறுப்பினர்களாக இருப்பர். அதில் ஒருவர் சட்ட அமைச்சர். பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவரும் ஆணையத்தின் உறுப்பினர்களாக இருப்பர். இதனால் நீதிபதிகளின் பெருன்பான்மை குறையும், இதனால் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு பங்கம் ஏற்படும் என ஆணையத்தை வேண்டாம் என்று கூறிவிட்டனர்
நீதிபதிகளின் பெரும்பான்மை குறையும் என்றால் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம். நீதிபதிகள் நியமனத்துக்கு நிரந்தர அமைப்பு இருக்க வேண்டும். இந்தியாவில் 1500 உயர் நீதிமன்ற நீதிபதிகளும், 36 உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் நியமிக்கப்படுகின்றனர். இதற்கு தனி அமைப்பு அவசியம்.
முன்சீப் நியமனத்துக்கு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிடுகிறது. எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு, இடஒதுக்கீடு, இறுதியாக போலீஸ் அறிக்கை பெறப்பட்டு முன்சீப் நியமிக்கப்படுகிறார். முன்சீப் நியமனத்துக்கு இத்தனை கட்டுப்பாடுகள் இருக்கும் போது யார் வேண்டுமானாலும் உயர் நீதிமன்ற நீதிபதியாக வரலாம் என்றால் எப்படி சரியாக இருக்க முடியும்.
இதனால் நீதிபதிகள் நியமனத்துக்கு நிரந்தர அமைப்பு அவசியம். மேலும் அதற்கு தனி செயலகம், போதுமான ஊழியர்கள் இருக்க வேண்டும். இந்த அமைப்பு ஒளிவு மறைவில்லாமல் நீதிபதிகளை நியமிக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் நீதிபதிகளாக வரலாம் என்பதும் நீதிபதிகளே நீதிபதிகளை நியமிக்கும் நடைமுறை இந்தியாவை தவிர உலகில் வேறு எங்கும் இல்லை.
நீதிபதிகள் தாங்களாகவே ஒரு பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அரசியலமைப்பு சட்டத்தில் இல்லாத விஷயத்தை கையில் எடுத்து, நாங்கள் தான் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கிறோம், இது தான் அரசியலமைப்புச் சட்டம் என்றால் அது அம்பேத்கருக்கு இழைக்கப்படும் துரோகம்" இவ்வாறு அவர் பேசினார். வழக்கறிஞர் கே.வாமனன் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT