Published : 25 Feb 2023 03:59 AM
Last Updated : 25 Feb 2023 03:59 AM
சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு பின்னடைவு இல்லை. தீர்மானங்கள் விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தில் உறுதியாக நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு நிர்வாகிகள் பற்றி ஆயிரம் ரகசியங்கள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றாக வெளியே வரும் என்றும் அவர் கூறினார்.
அதிமுகவில் பழனிசாமி தரப்பினரால் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை பசுமைவழி சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அவர்கள் கூறியதாவது:
மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்: கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்கள் இருவரின் கையெழுத்திட்டு பொதுக்குழு நடத்த வேண்டும் என்பது எங்கள் வாதம். ஆனால், ‘ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பற்றி நாங்கள் ஒன்றும் சொல்ல மாட்டோம்’ என்று சென்னை உயர் நீதிமன்ற அமர்வும், உச்ச நீதிமன்றமும் கைவிரித்துவிட்டன. ‘பொதுக்குழுவை கூட்டியது சரி, அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஒன்றும் சொல்ல மாட்டோம்’ என்று கூறிய உச்ச நீதிமன்றம் தனது பொறுப்பை சரியாக செய்யவில்லை என்றுதான் தோன்றுகிறது.
ஓபிஎஸ்: எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் 50 ஆண்டுகாலம் தங்கள் உயிரை கொடுத்து இந்த இயக்கத்தை காப்பாற்றியுள்ளனர். அவர்கள் பாதுகாத்த கட்சியின் சட்ட விதிகளை காப்பாற்ற இன்று நாங்கள் போராடுகிறோம். கட்சியின் பொதுச் செயலாளராக 30 ஆண்டுகள் இருந்தவர் ஜெயலலிதா. 96 வழக்குகளை எதிர்த்து நின்று இந்த இயக்கத்தை காப்பாற்றியுள்ளார். அதனால், அவர்தான் நிரந்தர பொதுச் செயலாளர் என்று நாங்கள் தீர்மானம் நிறைவேற்றினோம். அந்த தீர்மானத்தை ரத்து செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை.
அதிமுகவை தொண்டர்களுக்கான இயக்கமாக எம்ஜிஆர் உருவாக்கினார். அதற்காகதான், கட்சியின் உச்ச பதவியில் இருப்போரை தொண்டர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சட்ட விதியை கொண்டு வந்தார். அதையே திருத்துகின்றனர். கூவத்தூர்போல கட்சியை தன் கைக்குள் வைக்க பார்க்கின்றனர். அவர்களிடம் இருந்து கட்சியை காப்பாற்றவே தர்மயுத்தம் நடத்தி வருகிறோம்.
இந்த தீர்ப்புக்கு பிறகுதான் எங்கள் தொண்டர்கள் மிகப்பெரிய எழுச்சியுடன் உள்ளனர். எனவே, இது எங்களுக்கு பின்னடைவு இல்லை. தீர்மானங்கள் செல்லுமா, செல்லாதா என்பதை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பிரதான சிவில் வழக்குகள்தான் முடிவு செய்யும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தீர்மானங்கள் விவகாரத்தில் தீர்வு வரும் வரை போராடுவோம்.
இதுவரை வழக்கில் கவனம் செலுத்தி வந்தோம். இனி பெற வேண்டிய இடத்தில் தீர்ப்பை பெறுவோம். உயர் நீதிமன்றத்தில் உறுதியாக நல்ல தீர்ப்பு கிடைக்கும்.
மக்கள் மன்றத்தை நாட எங்கள் படை புறப்பட தயாராகிவிட்டது. விரைவில் மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து நீதி கேட்போம். கூடிய விரைவில் சசிகலாவுடன் சந்திப்பு நடைபெறும்.
‘சசிகலா, டிடிவி, ஓபிஎஸ்ஸை சேர்க்கமாட்டோம்’ என்று ஜெயக்குமார் கூறுகிறார். அது அவர் ஆரம்பித்த கட்சியா. அவரது ஆணவத்தை அடக்கும் சக்தி அதிமுக தொண்டர்களுக்கு உள்ளது.
பழனிசாமி மீதான கோடநாடு விவகாரம், அவரது ஆதரவு முன்னாள் அமைச்சர்கள் மீது போடப்பட்ட வழக்குகளில் முன்னேற்றமே இல்லை. அவர்கள்தான் திமுகவின் ‘ஏ டு இசட்’ டீமாக உள்ளனர். இதுபோல எங்கள் மீது ஏதாவது குற்றம் சொல்ல முடியுமா. ஆனால், அவர்கள் மீது ஆயிரம் இருக்கிறது. கட்சியின் கட்டுப்பாடு கருதியே அமைதியாக இருக்கிறோம். அவை ஒவ்வொரு ரகசியமாக வெளியில் வரும்.
மனோஜ் பாண்டியன்: ‘பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து நாங்கள் எதுவும் கூறவில்லை. அதை நாங்கள் ஆராயவில்லை’ என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த தீர்மானங்கள் செல்லும் என்று ஒரு வரிகூடஇல்லை. இந்திய தேர்தல் ஆணையத்திலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்றுதான் உள்ளது. எனவே, இந்த தீர்ப்பை எடுத்துக்கொண்டு, அதைமாற்ற முடியாது. இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமிஎன்று இந்த தீர்ப்பு அங்கீகரிக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். ஜேசிடி பிரபாகர், ஆர்.வைத்திலிங்கம், வா.புகழேந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...