Published : 25 Feb 2023 04:06 AM
Last Updated : 25 Feb 2023 04:06 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம், இன்று (25-ம் தேதி) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி ஆகியோர் இறுதிகட்ட பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவால் காலமானதையடுத்து, வரும்27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. திருமகனின் தந்தையும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளராக, முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் ச.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் ஆகியோர் உட்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், 25-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்தல் பணியில் திமுக ஈடுபடுத்தியுள்ளது.
இவர்களுக்கு பதிலடி தரும் வகையில், முன்னாள் அமைச்சர்கள் 30-க்கும் மேற்பட்டோர் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளை தேர்தல் பணியாற்ற அதிமுக களம் இறக்கியுள்ளது.
காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோரும், காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் பிரச்சாரம் மேற்கொண்டனர். திமுக கூட்டணி கட்சித்தலைவர்களும் ஈரோட்டில் பிரச்சாரத்தை நிறைவு செய்துள்ளனர்.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி தனது முதல்கட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்துள்ளார். 2-ம் கட்ட பிரச்சாரத்தை நேற்று தொடர்ந்தஅவர், இன்று மதியம் பெரியார் நகரில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய உள்ளார்.
அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பாஜக தலைவர் அண்ணாமலை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பிரச்சாரம் மேற்கொண்டனர். தேமுதிக வேட்பாளரை ஆதரித்து பிரேமலதா, சுதீஷ், விஜய பிரபாகரன் ஆகியோரும், நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் பிரச்சாரம் செய்கின்றனர்.
ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் பிப்.24, 25-ம் தேதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளதாக முதலில் அறிவிப்பு வெளியானது. இந்த பிரச்சாரம், இன்று (25-ம் தேதி) ஒரு நாளாக குறைக்கப்பட்டது. ஈரோட்டில் இன்று பிரச்சாரம் செய்ய உள்ள முதல்வர், நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து கார் மூலம் ஈரோடு வந்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வேன் மூலம் பிரச்சாரம் செய்யும் முதல்வர் ஸ்டாலின், காலை 9 மணிக்கு சம்பத் நகர் பகுதியில் பேசுகிறார். தொடர்ந்து காந்தி சிலை, பெரிய அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார். ஓய்வுக்கு பிறகு, மாலை 3 மணிக்கு முனிசிபல் காலனியில் பேசிவிட்டு,பெரியார் நகரில் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.
தேர்தல் ஏற்பாடுகள்: இதற்கிடையே, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமார் நேற்று கூறியதாவது: 80 வயதை கடந்தவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 348 பேர் தங்களது தபால் வாக்கை பதிவு செய்துள்ளனர். பிரச்சாரம் 25-ம் தேதி (இன்று) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, அரசியல் கட்சியினர் தங்களது தேர்தல் பணிமனைகளை அகற்றிக் கொள்வதோடு, எந்தவிதமான தேர்தல் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது. மாலை 5 மணிக்கு பிறகு, தொகுதிக்கு சம்பந்தமில்லாத அரசியல் கட்சியினர், பிரதிநிதிகள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
725 விதிமீறல் புகார்கள்: வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட தேர்தல் விதிமீறல்கள் குறித்து 4 நிலை கண்காணிப்புக் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.
தேர்தல் விதிமீறல் தொடர்பாகஇதுவரை 725 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில், போலீஸ் தரப்பில் 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நிலை கண்காணிப்புக் குழுசார்பில் 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வேட்பாளர்களின் செலவு கணக்கை கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT