Last Updated : 25 Feb, 2023 06:39 AM

 

Published : 25 Feb 2023 06:39 AM
Last Updated : 25 Feb 2023 06:39 AM

ஆர்.பி.எஃப். வீரர்கள் பணியில் இருப்பதை ஆய்வு செய்யும் க்யூஆர் குறியீடு முறை: 300 இடங்களில் செயல்படுத்த திட்டம்

சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்களின் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியை ஆய்வு செய்யும் வகையிலும், பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலும் க்யூஆர் குறியீடு முறையை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, சோதனை அடிப்படையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 10 இடங்களில் க்யூஆர் குறியீடு வைக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயில் உள்ள 6 கோட்டங்களில் முக்கிய கோட்டமாக சென்னை ரயில்வே கோட்டம் விளங்குகிறது. இதுவட தமிழகத்தில் 6 மாவட்டங்களையும், ஆந்திர மாநிலத்தில் 2 மாவட்டங்களையும் எல்லையாக கொண்டு, 697.45 கி.மீ. தொலைவை உள்ளடக்கியுள்ளது.

சென்னை கோட்டத்தில் மின்சார ரயில்கள், தினசரி, வாராந்திர ரயில்கள் என மொத்தம் 1,090 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் தினமும் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொள்கின்றனர்.

புறநகர் மின்சார ரயில்களில் மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பயணிக்கின்றனர். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் ரயில்வே போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ரயில்வே சொத்துகளை பாதுகாக்கும் நடவடிக்கையிலும் ஆர்.பி.எஃப். காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை கோட்டத்தில் அண்மையில் பல குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. மெதுவாகச் செல்லும் ரயில்களில் பயணிகளிடம் செல்போன் பறிப்பு, ரயில் நிலையத்தில் திருட்டு, ரயிலில் கஞ்சா, போதை மாத்திரை, ஹவாலா பணம் கடத்தல், ரயில் மீது கல் வீசுதல் உட்பட பல குற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

மேலும், சட்டத்தை மீறி ரயில் தண்டவாளத்தை கடந்து பலர் பிடிபட்டுள்ளனர். இப்படி பல்வேறு குற்றங்கள் அதிகரித்துள்ளன. இவற்றைத் தடுக்கும் விதமாக, ஆர்.பி.எஃப். வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், குற்றங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், ரயில் நிலையங்கள், ரயில்வே வளாகத்தில் பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாக, க்யூஆர் குறியீடு முறையை செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆர்.பி.எஃப். வீரர்கள் பணியில் இருப்பதை ஆய்வு செய்ய இந்த முறை கொண்டு வரப்படவுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட ஆர்.பி.எஃப். உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: முதல்கட்டமாக, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சோதனை அடிப்படையில் இந்த முறை செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலையத்தில் 10 இடங்களில் க்யூஆர் குறியீடு ஒட்டப்பட்டுள்ளது.

வருங்கால வைப்பு நிதி எண்: சென்னை கோட்ட ஆர்.பி.எஃப். போஸீஸார் இதற்கான செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அதன்பிறகு, இந்த செயலியில் வருங்கால வைப்பு நிதி(பிஎஃப்) எண்ணை (15 இலக்க எண்) குறிப்பிட்டு, பதிவு செய்ய வேண்டும்.

பின்னர் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை தான் பணியாற்றும் பகுதியில் உள்ள க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வது அவசியம். இதன்மூலம், சம்பந்தப்பட்ட பகுதியில் ஆர்.பி.எஃப். போலீஸார் பாதுகாப்புப் பணியில் உள்ளாரா இல்லையா என்பது தெரியவரும். இதன்மூலம் குற்றச்சம்பவங்கள் குறையும்.

சென்னை ரயில்வே கோட்டத்தில் 160 ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த ரயில் நிலையங்கள், ஆர்.பி.எஃப். வீரர்களின் புற நிலையங்கள் என 300 இடங்களில் க்யூஆர் குறியீடு ஸ்டிக்கர் ஒட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பெண்கள் பாதுகாப்பு: பெண் பயணிகள் பாதுகாப்புக்காக, மின்சார ரயில்களின் மகளிர் பெட்டிகளில் க்யூஆர் குறியீடு ஸ்டிக்கரை ஒட்டுவது தொடர்பாகவும், அதை ஸ்கேன் செய்து ஆர்.பி.எஃப். வீரர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது. இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x