Published : 08 May 2017 09:32 AM
Last Updated : 08 May 2017 09:32 AM

கிராமப்புற மேம்பாட்டுக்கு புதிய கருவிகள் கண்டுபிடிப்பு: யானைகள் ஊருக்குள் நுழைவதை தெரிவிக்கும் தொழில்நுட்பம் - சென்னை ஐஐடி தொழில்நுட்ப மேம்பாட்டுக் குழு தகவல்

‘நாட்டின் முதுகெலும்பே கிராமங் கள் தான், கிராம முன்னேற்றமே, நாட்டின் முன்னேற்றம்’ என்று தேச தந்தை மகாத்மா காந்தி கூறியுள்ளார். கிராமங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் வகையில் நாட்டில் உள்ள ஐஐடிகளில் கிராம தொழில்நுட்ப மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கிராமப்புறங்களுக்கு தேவை யான தொழில்நுட்ப வசதியை மேம்படுத்தவும், அங்குள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலும் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை ஐஐடியில் 2004-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் கிராம தொழில்நுட்ப மேம்பாட்டுக் குழு, இதுவரையில் 45 வகையான புதிய தொழில்நுட்ப கருவிகளைக் கண்டுபிடித்துள்ளது.

குறிப்பாக, நெசவாளர்கள் உற்பத்தியை அதிகரிக்க புதிய கருவி, பனைமரம் ஏறுவதற்கு புதிய கருவி, விலங்குகள் கிராமப் புறங்களுக்கு வருவதை முன் கூட்டியே அறிவிக்கும் தொழில் நுட்ப வசதியும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

இதுதொடர்பாக சென்னை ஐஐடி கிராம தொழில்நுட்ப மேம்பாட்டுக் குழு பேராசிரியர் அபிஜித் பி தேஷ்பாண்டே, திட்ட அதிகாரிகள் சந்தியா சீத்தாராமன், எஸ்.ஹரீஸ் ஆகியோர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத் தின் கீழ் இயங்கும் இந்த மேம்பாட்டுக் குழு, கிராமப்புற பொருளாதார மேம்பாட்டுக்கான ஆய்வுகளையும் புதிய கருவி களையும் கண்டுபிடித்து வரு கிறது.

இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு பட்ஜெட்டில் இருந்து ரூ.40 லட்சம் வரை ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது தவிர, பல்வேறு அரசு சார்ந்த நிறுவனங்களும் தேவையான அளவுக்கு நிதி உதவி செய்து வருகின்றன. இதுவரையில் மொத்தம் 45 வகையான கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற் போது 5 திட்டப்பணிகளும், புதியதாக 10 திட்டப்பணிகளையும் மேற்கொள்ளவுள்ளோம்.

பனைமரங்களில் ஏற புதிய கருவி, கோரைபாய்களை மதிப் பூட்டி உற்பத்தியை அதிகரிக்க புதிய கருவி, உடனடி தேவைக்கு பயன்படுத்தும் சிறிய கால்வாய் பாலம், உட்கார்ந்து நூல் சுற்றும் கயிறு ராட், தரமான மண்பாண்ட சக்கரம் இயந்திரம், பெடல் தறி, செயற்கைக் கால், வாழை இலை பிரிக்கும் இயந்திரம், நீர் கால்வாய்களில் மின்சாரம் உற்பத்தி செய்யும் மைக்ரோ ஹைடல் பவர் ஜெனரேட்டர், அசுத்த தண்ணீர் சுத்திகரிப்பு, சோலார் மின்சார வசதியுடன் கூடிய, மாற்றுத் திறனாளிகளுக்கான 3 சக்கர வண்டி, மாற்றுத் திறனாளிகளுக்கான கைத்தறி உட்பட மொத்தம் 45 விதமான கருவிகள் சென்னை ஐஐடியில் உள்ள பல்வேறு துறைகளுடன் இணைந்து கண்டுபிடித்துள்ளோம்.

இந்த கண்டுபிடிப்புகள் கிராமப்புற மக்களைச் சென்றடைய, தேர்வு செய்யப்பட்ட 40-க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். எங்கள் குழுவினர் கிராம மக்களை சந்தித்து இந்த புதிய கருவிகளின் செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளித்து வருகின்றனர்.

தமிழகத்தில் நீலகிரி உள்ளிட்ட சில இடங்களில் யானை போன்ற விலங்குகள் விவசாய நிலத்தில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதேபோல், கிராமங்களில் உள்ளே சென்று தாக்குவதால் மக்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்படுகின்றனர்.

எனவே, இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ஆனைகட்டி கிராமத்தில் இருந்து சுமார் 3 கி.மீ தூரத்தில் சென்சார் தகடுகள் பூமியில் புதைக்கப்பட்டு தொடர்ந்து கண் காணித்து வருகிறோம். இதற்காக சிறப்பு கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் தனி சாப்ட்வேர் உரு வாக்கப்பட்டுள்ளன.

இந்த தகடுகள் மீது விலங்குகள் பாதம் பட்டாலேயே அடுத்த சில நொடிகளில் கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள், வனத்துறையினருக்கு செல்போன் மூலம் உடனடியாக தகவல் செல்லும். மேலும், கிராமங்களில் நிறுவப்பட்டுள்ள பொதுகம்பங்களில் ‘அலாரம்’ அடிக்கும் புதிய வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.

தற்போது, இதற்கான முன் னோட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த சில மாதங்களில் இந்த புதிய திட்டம் பயன்பாட்டுக்கு வரும். பின்னர், தேவையான இடங்களுக்கு அரசு நிறுவனங்களின் நிதி உதவியுடன் விரிவுபடுத்தப்படும். இதன்மூலம் விவசாயம் மற்றும் கிராமப்புற மக்களை பாதுகாக்க முடியும். இதனால், விலங்குகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

தற்போது, தமிழகத்தில் வெட்டப் பட்டு வரும் சீமைக் கருவேல மரங்களை பல துண்டுகளாக வெட்டி, எரிபொருளாக பயன் படுத்த கறி துண்டுகளாகவும், வேர்கடலை, எள், தேங்காய் உள் ளிட்ட பொருட்களைப் பயன்படுத்தி வீட்டிலேயே இயற்கை வழியில் எண்ணெய் தயாரிக்கும் கருவி உட்பட 5 புதிய திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதுதவிர, கிராமப்புற சந்தைகளில் வியாபாரிகள் பயன்பெறும் வகையில் சூரிய மின்சாரம் மூலம் இயங்கும் சிறிய வகையான பிரிட்ஜ்கள், பழங்களை தரம் பிரித்து எண்ணும் கருவிகள் உட்பட மொத்தம் 10 புதிய திட்டங்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம் என்று அவர்கள் கூறினர்.

தகடுகள் மீது விலங்குகள் பாதம் பட்டாலேயே அடுத்த சில நொடிகளில் கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள், வனத்துறையினருக்கு செல்போன் மூலம் உடனடியாக தகவல் செல்லும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x