Last Updated : 31 May, 2017 06:16 PM

 

Published : 31 May 2017 06:16 PM
Last Updated : 31 May 2017 06:16 PM

முதுநிலை மருத்துவப் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிர்வாக இடமாக மாற்ற முடியாது: கிரண்பேடி அறிவிப்பு

சென்டார் மருத்துவக்கல்லூரி முதுநிலைப் படிப்பு கலந்தாய்வு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முன்பாக நடந்தது. இதற்கு மாணவர்கள் மத்தியில் வரவேற்பு எழுந்தது.

அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிர்வாக இடமாக மாற்ற முடியாது என்று ஆளுநர் தெரிவித்தார். கலந்தாய்வுக்கு பிறகு கல்லூரிகளுக்கு சென்று மாணவர் சேர்க்கை நடக்கிறதா என்பதை பார்வையிட்டார்.

உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசு மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வை கொண்டுவந்தது. மேலும் இந்த ஆண்டு மத்திய மருத்துவ கவுன்சில் மேல்நிலை படிப்புகளில் உள்ள 50 சதவீத இடங்களை மாநில அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் நிரப்ப வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.

இதனால் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகள் வேறு வழியின்றி முதுநிலை மருத்துவ படிப்பில் தங்களிடமுள்ள 315 இடங்களில் 159 இடங்களை புதுச்சேரி அரசுக்கு இட ஒதுக்கீடாக வழங்கியது.

இதனை அடுத்து கட்டண நிர்ணய குழு கட்டணம் நிர்ணயிக்காமலேயே சென்டாக் முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. இதில் 88 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதனை அடுத்து கட்டண நிர்ணய குழு தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்பிற்கு அரசு ஒதுக்கீடு இடத்திற்கு ரூ.5.50 லட்சமும், நிர்வாக ஒதுக்கீடு இடத்திற்கு ரூ.14 லட்சமும் கட்டணமாக நிர்ணயித்தது.

ஆனால் தனியார் மருத்துவ கல்லூரிகள் அக்கட்டணத்தின் அடிப்படையில் மாணவர்களை சேர்த்துக்கொள்ள மறுத்தது. இது குறித்து மாணவர்கள் அரசிடமும், முதல்வரிடமும், ஆளுநரிடமும் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஆளுநர் கிரண்பேடி இன்று சென்டாக் அலுவலகத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது சென்டாக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படாத 71 இடங்களை நிர்வாக இட ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பியது தவறு, அதையும் புதுச்சேரி மாணவர்களுக்கே வழங்க இன்று கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதன்படி இன்று கலந்தாய்வு நடக்கும் சென்டாக் அலுவலகத்துக்கு ஆளுநர் கிரண்பேடி காலையில் வந்தார். கலந்தாய்வு நடப்பதை உறுதி செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஆளுநர் கிரண்பேடி கூறுகையில், "அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிர்வாக ஒதுக்கீடாக மாற்ற முடியாது, அரசு ஒதுக்கீட்டில் காலியாகும் இடத்தை தேசிய ஒதுக்கீட்டிற்குத்தான் கொண்டு செல்ல முடியும். கடந்த காலங்களில் என்ன நடந்தது வேறு, இனி வெளிப்படையாக நடைபெற சிலவற்றை செய்ய உள்ளேன்.

குறைதீர்ப்பு மையம் அமைக்க உள்ளேன். எவ்வளவு சீட் உள்ளது, நிரம்பியுள்ளது ஆகியவைகளை தெரிவிக்க விவர தகவல் மையம் அமைக்கப்படும். நிகர்நிலை பல்கலைக்கழக கல்லூரிகளுக்கும் கட்டண நிர்ணயக்குழு நியமித்த கட்டணம் செல்லும். சென்டாக்கில் குளறுபடியான சூழலை இனி அனுமதிக்க இயலாது" என்றார்.

அப்போது முன்னாள் அமைச்சர் கண்ணன் சென்டாக் அலுவலகத்திற்கு வந்து, ஆளுநர் கிரண்பேடியை சந்தித்தார். மாணவர்களின் நலனுக்காக எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்க வந்தேன் என்று குறிப்பிட்டார்.

ஆளுநர், 'இதுபோல் நாம் அனைவரும் மருத்துவ கல்லூரிகளை கேட்டால்தான் தங்களது போக்கை மாற்றிக்கொள்ளும் என்று கூறியதுடன், என்னுடன் கல்லூரிகளுக்கு வருகிறீர்களா?' என்றும் கேட்டார்.

அதற்கு கண்ணன் சம்மதம் தெரிவித்து ஆளுநருடன் பிம்ஸ் மருத்துவ கல்லூரிக்குச் சென்றார். ஆனால் கல்லூரி நிர்வாகத்தினர் உயர் அதிகாரிகள் யாரும் இல்லை என்றும் மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான அரசாணை எதுவும் கல்லூரி நிர்வாகத்துக்கு வரவில்லை என்றும் தெரிவித்தனர். இதனை அடுத்து அங்கிருந்து இருவரும் புறப்பட்டனர்.

இந்நிலையில் சென்டாக் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கூறுகையில், "அரசு ஒதுக்கீட்டில் காலியாக இருந்த 71 இடங்களுக்கு நடைபெற்ற கலந்தாய்வில் 63 மாணவர்கள் பங்கேற்றனர். அதில் 26 பேர் இடங்களை தேர்வு செய்தனர். நீட் தேர்வில் 50 முதல் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்தோர் இதில் பங்கேற்றனர். மொத்தமுள்ள 162 இடங்களில் காலியாக உள்ள 45 இடங்கள் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படும்" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x