Published : 27 May 2017 10:11 AM
Last Updated : 27 May 2017 10:11 AM

8-ம் வகுப்பு வரை தேர்வு இல்லாத நிலையை மாற்ற வேண்டும்: அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

``பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை தேர்வு இல்லாத நிலையை மாற்ற வேண்டும்” என்று, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

நாகர்கோவிலில் நிருபர் களுக்கு அவர் அளித்த பேட்டி:

மோடி நாட்டின் பிரதமரான பிறகு பாமர மக்களின் வங்கிக் கணக்கு ரூ. 4 கோடியிலிருந்து, ரூ. 28 கோடியை எட்டியிருக்கிறது. நாட்டில் 23 கோடி பேருக்கும், குமரி மாவட்டத்தில் 82 ஆயிரம் பேருக்கும் ரூபே கார்டு வழங்கப்பட்டுள்ளது.

பாமர மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட விபத்து காப்பீடு திட்டத்தில் குமரியில் 1.26 லட்சம் பேரும், தமிழகத்தில் 65 லட்சம் பேரும் இணைந்திருக்கின்றனர். அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் குமரியில் 1,600 பேரும், தமிழகத்தில் 2.14 லட்சம் பேரும் இணைந்துள்ளனர்.

ரூ.64 கோடி ஒதுக்கீடு

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்துக்கு 1,314 வீடுகளும், தமிழகத்தில் 1.50 லட்சம் வீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. எளிய வங்கி கடனுக்கு முத்ரா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் 2,344 தொழில் முனைவோர் இத்திட்டத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். 78 கோடி ரூபாய் விநியோகம் செய்யப் பட்டுள்ளது.

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் இரண்டு புதிய மீன்பிடி துறைமுகங்கள், சீர்காழியில் படகு இறங்குதளம், இனயம் துறைமுகம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கோட்டாறு, செட்டிக்குளம், வடசேரி, தக்கலையில் மேம்பாலங்கள் அமைக்க ஆய்வு நடந்து வருகிறது.

8-ம் வகுப்புவரை தேர்வு இல்லாத நிலையை மாற்ற வேண்டும். கழகங்களுக்கு ஓட்டு போட்டதால் அரசு பள்ளிகளில் பாமரன் வீட்டு குழந்தைகள் கல்வியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிகளின் தரம், ஆசிரியர்கள் தரம் உயர்த்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x