Published : 24 Feb 2023 09:36 PM
Last Updated : 24 Feb 2023 09:36 PM
சென்னை: சென்னையிலிருந்து மதுரைக்கு இருமார்க்கத்திலும் இயக்கக் கூடிய தேஜஸ் விரைவு ரயில், வரும் 26-ம் தேதி முதல் சோதனை அடிப்படையில் 6 மாத காலங்களுக்கு தாம்பரத்தில் நின்று செல்ல மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளதாக இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை - மதுரை இடையே இயக்கப்படும் இருமார்க்க தேஜஸ் விரைவு ரயில் வரும் 26-ம் தேதி முதல் தாம்பரத்தில் நின்று செல்ல மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தாம்பரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மற்றும் ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் சென்னை - மதுரை இடையே இயக்கப்படும் இருமார்க்க தேஜஸ் விரைவு ரயில், தாம்பரத்தில் நிற்க வேண்டும் என தம்மிடம் கோரிக்கை விடுத்ததாகவும், இந்த கோரிக்கையை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கையை ஏற்ற மத்திய ரயில்வே அமைச்சர், சென்னையிலிருந்து மதுரைக்கு இருமார்க்கத்திலும் இயக்கக் கூடிய தேஜஸ் விரைவு ரயில், வரும் 26-ம் தேதி முதல் சோதனை அடிப்படையில் 6 மாத காலங்களுக்கு தாம்பரத்தில் நின்று செல்ல உத்தரவிட்டுள்ளதாகவும், மேலும், பயணிகளின் வரத்து மற்றும் ரயில் பயணச்சீட்டுகளின் எண்ணிக்கை அடிப்படையில், தொடர்ந்து இந்த தேஜஸ் ரயில் நின்று செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்திருப்பதாக" அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தேன்.
ரயில்வே அமைச்சரிடம் நேரில் பல முறை வலியுறுத்தினேன்.இன்று வெற்றி கிட்டியுள்ளது. அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிற்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT