Last Updated : 24 Feb, 2023 03:08 PM

 

Published : 24 Feb 2023 03:08 PM
Last Updated : 24 Feb 2023 03:08 PM

புதுச்சேரியில் விரைவில் 19 இருக்கைகள் கொண்ட இலகுரக விமான சேவை தொடக்கம்

புதுச்சேரி: விரைவில் முக்கிய நகரங்களை இணைக்க 19 இருக்கைகள் கொண்ட இலகு ரக விமான சேவை புதுச்சேரியில் தொடங்கப்படுகிறது. இதற்கான ஆய்வுப் பணிகளும் நடந்து வருகிறது.

புதுச்சேரியில் லாஸ்பேட்டையில் விமான நிலையம் அமைந்துள்ளது. கடந்த 2013 ஜனவரியில் புதிய விமான நிலைய வளாகம் திறக்கப்பட்டது. புதிய விமான நிலைய வளாகம் திறக்கப்பட்ட உடன் 2013 ஜனவரி முதல் விமானங்கள் இயக்கப்பட்டன. புதுச்சேரியில் இருந்து பெங்களூருக்கு விமானங்கள் இயக்கப்பட்டன. பயணிகள் எண்ணிக்கை குறைவால் விமான சேவை கடந்த 2014 பிப்ரவரி முதல் நிறுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி முதல் விமான போக்குவரத்து சேவை தொடங்கியது. இந்த விமான சேவையும் முன்னறிவிப்பு ஏதுமின்றி 2015 அக்டோபரில் நிறுத்தப்பட்டது. மத்திய அரசின் பிராந்திய இணைப்பு திட்டமான உதான் கீழ் விமான சேவை தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு புதுச்சேரியிலிருந்து ஐதராபாத், பெங்களூருக்கு விமான சேவைகள் தற்போது உள்ளன.

இந்நிலையில் விரைவில் 19 இருக்கைகள் கொண்ட இலகுரக விமான சேவை தொடங்கப்படவுள்ளன. அதற்காக சிறிய ரக விமானம் புதுச்சேரி வந்தது. அவ்விமானத்தை பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் தேனீ ஜெயக்குமார் உள்ளிட்டோர் பார்த்தனர்.

இது தொடர்பாக சிறு விமான சேவையைத் தொடங்கும் தனியார் நிறுவனத்தின் சிஇஓ சதீஷ்குமார் கூறுகையில், "சிறிய நகரங்களை இணைக்க மத்திய அரசின் உதான் திட்டத்தில் 19 இருக்கைகள் கொண்ட விமான சேவையை தொடங்கவுள்ளோம். அதை காட்சிப் படுத்த புதுச்சேரி விமான நிலையத்துக்கு எடுத்து வந்தோம்.

இவ்விமானத்தை செக் குடியரசில் வாங்கினோம். இவ்விமானங்கள் இறங்க 600 மீட்டர் ஒடுதளம் போதுமானது. முக்கிய நகரங்களுக்கு இயக்க திட்டமிட்டுள்ளோம். அதில் புதுச்சேரியும் ஒன்று" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x