Published : 24 Feb 2023 04:05 AM
Last Updated : 24 Feb 2023 04:05 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டையில் ராகி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு, நேரடி கொள்முதல் செய்வதால், நிகழாண்டில் விவசாயிகள் அதிகளவில் ராகி பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் அதிகளவில் ராகி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, சூளகிரி, ஓசூர், தளி, தேன்கனிக் கோட்டை, கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, பர்கூர் உள்ளிட்டபல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ராகி பயிர் செய்கின்றனர். குறிப்பாக, ஜூன், ஜூலை மாதங்களிலும், டிசம்பர், ஜனவரி மாதங்களிலும் ராகி பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.
மாவட்டத்தில் 45 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் ராகி சாகுபடி செய்யப்படுகிறது. இதில், சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை வட்டத்தில் சுமார் 40 ஆயிரம் ஹெக்டேர் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும், ராகி சாகுபடியில் ஹெக்டேருக்கு, 1.5 டன் முதல் 2 டன் வரை மகசூல் கிடைக்கிறது. இங்கு உற்பத்தியாகும் ராகி தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.
பிஸ்கட், நூடுல்ஸ், களி, கூழ் உள்ளிட்ட உணவுப் பண்டங்கள் தயாரிக்கவும், கோழி தீவனத்துக்கும் ராகி அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், சிறு, குறு விவசாயிகளிடம் இருந்து அரசே நேரடியாக ராகியை கொள்முதல் செய்யும் பணியை தொடங்கி உள்ளது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தற்போது நிலங்களை சீர் செய்து, ராகி நாற்று நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரேஷன் கடைகளில் விநியோகம்...: இது குறித்து ராகி விவசாயிகள் கூறும்போது, மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் ராகி, வாரச்சந்தைகளில் விற்பனை செய்வது வழக்கம். வெளியூர் வியாபாரிகள் நேரடியாக வந்து கொள்முதலும் செய்வர்.
இந்நிலையில், தருமபுரி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, சோதனை அடிப்படையில் ஒரு குடும்பத்துக்கு மாதம் ஒன்றுக்கு 2 கிலோ அரிசிக்கு பதிலாக ராகி சிறு தானியம் விநியோகம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது.
11,040 மெ.டன் ராகி இலக்கு: இதற்காக சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளியில் ராகி நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம், நீலகிரி மாவட்டத்தின் ஓராண்டுக்கான தேவையான 11,040 மெ.டன் ராகி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
மேலும், கிணறுகள், குளம், குட்டைகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உள்ளதாலும், விவசாயிகள் ராகி பயிர் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பாசன பரப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது, என்றனர்.
ரூ.18 லட்சம் வங்கிக் கணக்கில்..: இது குறித்து வேளாண்மை அலுவலர்கள் கூறும்போது, விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ ரூ.35.78 விலையில் ராகி கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது வரை 50 விவசாயிகளிடம் ராகி கொள்முதல் செய்யப்பட்டு, அவர்களது வங்கிக் கணக்கில் சுமார் ரூ.18 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது.
ராகி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் ராகியை விற்பனை செய்து பயன்பெறலாம். இது குறித்து, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் துண்டுபிரசுரங்கள் அச்சிடப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகி றோம், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT