Published : 24 Feb 2023 06:56 AM
Last Updated : 24 Feb 2023 06:56 AM
சென்னை: போக்குவரத்து விதிகளை மீறும் அரசுப் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர், சமூக வலைதளங்கள் மூலம் புகார் தெரிவிக்க அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில்குமார் சி.சரத்கர் காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளைக் குறைக்க போக்குவரத்து காவல் துறை 24 மணிநேரமும் உழைத்து வருகிறது. போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் போக்குவரத்து இடையூறுகள் குறித்து பொதுமக்கள் சமூக வலைதளங்கள் மூலம் புகார் தெரிவிக்கலாம்.
வாட்ஸ்-அப்பில் 9003130103 என்ற எண்ணுக்கு புகைப்படத்துடன் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். மேலும் ட்விட்டர் (@ChennaiTraffic), பேஸ்புக் (Greater Chennai Traffic Police), இன்ஸ்டாகிராம் (chennai trafficpolice) ஆகியவை மூலமும் புகார்மற்றும் கருத்து தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவர்கள் விதிமீறல்கள் கவனிக்கப்பட்ட இடம், நேரம்,தேதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும்.
கடந்த 2 மாதங்களில் ட்விட்டர் மூலம் 1,267 விதிமீறல்கள் போக்குவரத்து போலீஸாரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டன. அதில் 90.5 சதவீத புகார்கள் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. போக்குவரத்து காவல்துறையின் பேஸ்புக் பக்கத்தை1,01,734 பேர் பின் தொடர்கின்றனர்.
லஞ்சம் வாங்கும் மற்றும் எல்லை மீறும் போக்குவரத்து போலீஸார் குறித்தும் சமூக வலைதளங்கள் மூலம் புகார்தெரிவிக்கலாம். முறையான விசாரணை செய்து தவறு நடந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பேருந்துகள், அரசுவாகனங்கள் அதிகளவில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சட்டம் அனைவருக்கும் சமம்தான். எனவே, விதிமீறல்களில் யார் ஈடுபட்டாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர்கள் பேருந்துகளில் படிக்கட்டில் தொங்குவதாகவும், எல்லை மீறுவதாகவும் புகார்கள் வருகின்றன. அதற்கு நிரந்தர தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து தொடர்பான ஆலோசனைகளை வழங்க 155 இடங்களில் கருத்துகேட்புக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. வரும் சனிக்கிழமை அனைத்து பார்க்கிங் பகுதிகளிலும் திடீர் சோதனை நடத்திசரியில்லாத நம்பர் பிளேட்களை மாற்றி புதியதை மாட்ட ஏற்பாடுசெய்யப்படுகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT