Published : 31 May 2017 10:29 AM
Last Updated : 31 May 2017 10:29 AM
‘டிக்ஸ்லக்சியா’ எனப்படும் கற்றல் குறைபாட்டால் 6-ம் வகுப்போடு பள்ளிப் படிப்பை கைவிட்ட போதிலும் தனது விடா முயற்சியால் இன்று வருமான வரித்துறை இணை ஆணையராக பதவி வகித்து வருகிறார் நந்தகுமார்.
சென்னையில் உள்ள வருமான வரித்துறை இணை ஆணையராக பதவி வகித்து வருபவர் வி.நந்தகுமார். இவர் பள்ளியில் படிக்கும்போதே கற்றல் குறைபாட்டால் அவதிப்பட்டுள்ளார். இதனால் படிக்க முடியாமல் 6-ம் வகுப்பில் தோல்வியடைந்து, பின்னர் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டார். அதன் பிறகு, சிறு சிறு வேலைகளை செய்து வந்தார்.
படிப்பில் ஆர்வம்எனினும், படிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் அவர் விடா முயற்சியுடன் தொடர்ந்து படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று இன்று வருமான வரித்துறை இணைஆணையராக பதவி வகித்து வருகிறார். அத்துடன், ‘துணிந்து நில்’என்ற பெயரில் அரசுப் பள்ளி மாணவர்களைச் சந்தித்து அவர்களுக்கு வாழ்க்கைத் திறன் அறிதல்
குறித்து போதித்து வருகிறார். அவர் இந்த நிலையை அடைந்தது குறித்து ‘தி இந்து’விடம் கூறிய தாவது: “எனக்கு ஏன் படிப்பு ஏறவில்லை என எனக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கும், பெற் றோர்களுக்கும் தெரியவில்லை. காரணம், கற்றல் குறைபாடு குறித்து ஆசிரியர்களுக்கே தெரியவில்லை. பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியதால் பெற்றோர் வருத்தம் அடைந்தனர். வயது ஆக ஆக, எனக்கும் படிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
வீட்டிலேயே படிப்புஆனால், மீண்டும் பள்ளிக்கூடம் செல்ல மிரட்சியா இருந்தது. அப்போது அமல்ராஜ் என்ற நண்பன்,‘பள்ளிக்கூடம் போய்த்தான் படிக்கணும்னு இல்லை, வீட்டில் இருந்து படித்தே தேர்வு எழுதலாம்’என்று சொன்னான். உடனடியாக தேர்வுக்கு விண்ணப்பித்தேன். வேலை செஞ்சுகிட்டே படித்து தேர்வு எழுதினேன்.
சிவில் சர்வீஸ் ஆர்வம்
வீட்டிலேயே பாடங்களைப் படித்து எழுதி எழுதிப் பார்ப்பேன். நாலு தடவை தப்பா எழுதினா, அஞ்சாவது தடவை சரியா எழுதிடுவேன். பிளஸ் 2 தேர்ச்சி பெற்றதும் வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் கல்லூரியில் ஆங்கில இலக்கியமும், பிரசிடென்சி கல்லூரியில் எம்ஏ ஆங்கிலமும் படித்து தேர்ச்சி பெற்றேன்.
அப்போதுதான் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படிக்கும்போது தப்பு தப்பாக படிப்பதையும், அவற்றை திருப்பி எழுதும் போது ஏகப்பட்ட பிழைகளுடன் எழுதுவதையும் எனது நண்பர் சேஷாத்ரி என்பவர்தான் கண்டுபிடித்துக் கூறினார். அப்போதுதான் எனக்கு ‘டிக்ஸ்லக் சியா’ எனப்படும் கற்றல் குறைபாடு இருப்பது தெரியவந்தது. எனினும் மனம் தளராமல் விடாமுயற்சியுடன் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதினேன். இவ்வாறு கடினமாக உழைத்ததன் விளைவாக ஐ.ஆர்.எஸ். (இந்திய வருவாய் பணி) பணியில் சேர்ந்தேன்.
இந்த சமூகத்துக்கு ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என மனதில் தோன்றியதால், நண்பர்கள் உதவியுடன் ‘துணிந்து நில்’ என்ற பெயரில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களைச் சந்தித்து அவர்களுக்கு வாழ்க்கைத் திறன் அறிதல் குறித்து போதித்து வருகிறேன்.
இதற்காக ஆண்டொன்றுக்கு சுமார் 4 லட்சம் அரசுப் பள்ளி, மாணவர்களைச் சந்தித்து போதித்து வருகிறேன்.
ஆசிரியர்களுக்கும் பயிற்சி
தற்போது ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கத் தொடங்கியுள் ளேன். அண்மையில் விஐடி பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சுமார் 700 ஆசிரியர்
களுக்கு பயிற்சி அளித்தேன். பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட முடிவு செய்த மாணவர்கள் சிலர் எனது நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தாங்களும் வாழ்வில் ஓர் உன்னத நிலையை அடைவோம் எனக் கூறினர். இதுதான் எனது உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT