Published : 24 Feb 2023 05:06 AM
Last Updated : 24 Feb 2023 05:06 AM

அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் - பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வம் கருத்து

பெரியகுளம் / தேனி: அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒன்றரைக் கோடி தொண்டர்கள் தன்பக்கம் இருப்பதாக பழனிசாமி கூறியுள்ளார். தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து விரைவில் விரிவான அறிக்கை வெளிவரும் என்றார்.

பின்னர் அவர் காரில் மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்குப் புறப்பட்டு சென்றார்.

முன்னதாக ஓபிஎஸ், நேற்று முன்தினம் பெரியகுளம் வந்தார். நேற்று தீர்ப்பு வெளியாகும் தகவல் கிடைத்ததும் ஆதரவாளர்கள், வழக்கறிஞர்கள் சிலருடன் வீட்டிலேயே நேற்று முன்தினம் இரவு ஆலோசனை நடத்தினார்.

ஓபிஎஸ்ஸின் தாயார் பழனியம்மாள் (92) தேனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். தாயாரை நேற்று காலை ஓபிஎஸ் பார்த்து உடல் நலம் விசாரித்தார். பின்னர் பெரியகுளம் திரும்பினார்.

திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று ஓபிஎஸ் ஆதரவாளர்களின் இல்லத் திருமணங்கள் நடந்தன. இதில் பங்கேற்க ஓபிஎஸ் திட்டமிட்டிருந்தார். தீர்ப்பை தெரிந்துகொண்டு வீட்டிலிருந்து புறப்படத் தயாராக இருந்தார். அங்கு தொண்டர்கள், நிர்வாகிகள் பலர் வீட்டில் இருந்தனர். தீர்ப்பு தனக்குச் சாதகமாக இல்லாததால் ஓபிஎஸ் திருமண விழாக்களில் பங்கேற்பதைத் தவிர்த்துவிட்டு வீட்டிலேயே இருந்துவிட்டார்.

அங்கிருந்த தொண்டர்களும் வெளியேறியதால் வீடு வெறிச்சோடிக் காணப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x