Published : 24 Feb 2023 04:44 AM
Last Updated : 24 Feb 2023 04:44 AM

ஜெயலலிதாவால் உச்சம் தொட்டு, பழனிசாமியால் வீழ்ந்த ஓபிஎஸ் - உச்ச நீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு வந்த தர்மயுத்தம்

தர்மயுத்தம் தொடங்கியபோது ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்த ஓபிஎஸ். (கோப்புப் படம்)

ஜெயலலிதாவால் முதல்வராக முடிசூட்டப்பட்டவர்; 3 முறை முதல்வராக இருந்தவர் என்று பெருமைப்படுத்தப்பட்டாலும், கட்சியில் தனக்கிருந்த செல்வாக்கை பறிகொடுத்து அதிமுக என்ற கட்சியில் இடமில்லாத நிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் தற்போது வந்துள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்த ஓபிஎஸ், 1972-ல் அதிமுகவை எம்ஜிஆர் ஆரம்பித்தபோது அதில் இணைந்தார். அதன்பின் பெரியகுளம் நகர வார்டு கழகப் பிரதிநிதி, எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் என வளர்ந்தார்.

எம்ஜிஆர் மறைவுக்குப்பின் இருஅணியாக பிரிந்து அதிமுக ஜெயலலிதா தலைமையில் இணைந்தபோது, பெரியகுளம் நகரச் செயலாளரானார். 1996-ல் பெரியகுளம் நகராட்சித் தலைவரானார். அதன்பின் 2001-ல் பெரிய குளம் தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலாக சட்டப்பேரவைக்குள் நுழைந்த நிலையில், அவரை வருவாய்த் துறை அமைச்சராக்கினார். இதில் இருந்தே அதிமுகவில் ஓபிஎஸ் முக்கியத்துவம் பெறத் தொடங்கினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலி தாவுக்கு நம்பிக்கைக்குரியவராகவும் மாறினார். இதற்கு உதாரணம், ஜெயலலிதா கடந்த 2001-ம் ஆண்டு இறுதியில் டான்சி நிலபேர வழக்கில் சிறை சென்றபோது, முதல்முறை எம்எல்ஏவான பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார். அந்தளவு நம்பிக்கை ஓபிஎஸ் மீதிருந்தது.

அடுத்ததாக கடந்த 2014-ல் சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் சிறைத் தண்டனை அறிவித்து, முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா, முதல்வர் பொறுப்பை மீண்டும் ஓபிஎஸ் வசமே ஒப்படைத்தார்.

2016-ல் ஜெயலலிதா மறைந்த பின், அன்றிரவே மீண்டும் ஓபிஎஸ் முதல்வரானார். ஆனால், அவரது முதல்வர் பதவி 2017 பிப்.5-ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. ஓபிஎஸ்ஸை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு, தான் முதல்வராக சசிகலா திட்டமிட்டார். ஓபிஎஸ்ஸும் ராஜினாமா செய்தார். ஆனால்பிப்.7-ம் தேதி ஜெயலலிதா சமாதியில் 40 நிமிடங்கள் தியானம் செய்ததுடன், தன்னை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தியதாகக் கூறி தர்மயுத்தத்தை ஆரம்பித்தார் ஓபிஎஸ்.

அத்துடன், சொத்து குவிப்பு வழக்கு காரணமாக சசிகலா சிறைக்குச் சென்றார். இந்த நேரத்தில் தான்பழனிசாமிக்கு அதிர்ஷ்டம் அடித்தது. பழனிசாமி முதல்வரானார். அதிமுகவில் இரு அணிகளில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்ற போட்டியும் தொடங்கியது.

ஜெயலலிதா மறைவால் நடந்தஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்குப் பின் தொடர் பேச்சுவார்த்தைகள், பேரங்கள் மூலம், பழனிசாமி, ஓபிஎஸ் அணிகள் 2017 ஆகஸ்ட்டில் இணைந்தன.

அடுத்து நடந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி தேர்வாகினர். இரட்டை தலைமையின் கீழ் அதிமுக வந்தது. இருதலைவர்கள் இணைந்தாலும், அவர்கள் கீழ் உள்ள தொண்டர்கள் இணையவில்லை என்பதே உண்மை.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு,2021 சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்டவற்றில் பழனிசாமியின் ஆதிக்கம் அதிகரித்தது. 2021-ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்குப் பின் எதிர்க்கட்சித் தலைவர் தேர்தலிலும் சிக்கல் ஏற்பட்டது. இறுதியில் ஓபிஎஸ் விட்டுக் கொடுக்கும் நிலை உருவானதால், துணைத்தலைவர் பதவியை பெற்றார். அதன்பின், இறுதியாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் தோல்வி கட்சியில் ஒற்றைத் தலைமைக்கான தேவையை உருவாக்கியது.

கடந்த ஜூன் 23-ல் நடைபெற்ற பொதுக்குழுவில், தீர்மானங்கள் செல்லாது என்றும், ஜூலை 11-ல் மீண்டும் பொதுக்குழு கூடும் எனவும் அறிவிக்கப்பட்டதால், ஓபிஎஸ் அங்கிருந்து வெளியேறினார். ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கிலும் ஓபிஎஸ் தரப்புக்கு வெற்றி கிடைக்கவில்லை.

அன்று பொதுக்குழு நடைபெற்ற நிலையில், இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வான துடன், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு நிர்வாகிகள் நீக்கப்பட்டனர்.

அதேநேரம் அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் நுழைய, கலவரம் வெடித்து, அலுவலகம் மூடி சீல்வைக்கப்பட்டது. அதன்பின் அலுவல கம் பழனிசாமி வசம் வந்தது. இது ஓபிஎஸ்சுக்கு முதல் அடியாக பார்க்கப் பட்டது.

அதன்பின், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில், பழனிசாமி ஆதரவாளரான தமிழ்மகன் உசேனுக்கு அதிகாரம் வழங்கியது உச்ச நீதிமன்றம். இது அடுத்த சறுக்கல்.

அடுத்ததாக தற்போது, உச்ச நீதிமன்றம் பொதுக்குழு தொடர்பான வழக்கில் மீண்டும் பழனிசாமி தரப்புக்கே வெற்றி கிடைத்துள்ளது. இது ஓபிஎஸ் தரப்புக்கு மிகப்பெரும் தோல்வியாக மாறியுள்ளது. இதன்மூலம் அதிமுகவில் ஓபிஎஸ்ஸின் சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x